தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக பல வெற்றி படங்களை வழங்கியவர் தான் இயக்குனர் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த சுந்தர் சி திடீரென தலைநகரம் படம் மூலமாக ஹீரோ அவதாரம் எடுத்தார். கோலிவுட்டில் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரும் ஹீரோவாக நடிப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில் ஹீரோவாக அறிமுகமான சுந்தர் சி-யின் தலைநகரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. குறிப்பாக இப்படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலு பயங்கர பிரபலமானார். இன்று வரை இந்த கதாபாத்திரம் பேசப்பட்டு வருகிறது. தலைநகரம் படத்திற்கு பின்னர் சுந்தர் சி பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவரது படங்கள் வெற்றி பெறவில்லை.
எனவே சில காலம் நடிப்பதை தவிர்த்து படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் இறுதியாக 2019ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் படம் படு தோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து தற்போது அவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர் சி இயக்கி நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சுந்தர் சி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சுந்தர் சி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம். ஆனால் இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கவில்லை. மாறாக இயக்குனர் வி.துறை இயக்குகிறாராம்.
இயக்குனர் வி.இசட்.துறை நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு பட இயக்குனர் இயக்கத்தில் தனது வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி நடிக்க உள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.