வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கொடூரமான வில்லனாக மிரட்டிய ஜெய்.. சுந்தர் சி-யின் பட்டாம்பூச்சி எப்படி இருக்கு?

திரையுலகில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ள சுந்தர் சி தற்போது ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவர் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து பட்டாம்பூச்சி என்ற க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்போது அதிக அளவில் த்ரில்லர் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வெளிவருவது வழக்கமாக இருக்கிறது. அதனடிப்படையில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஜெய் கொடூரமான ஒரு வில்லனாக நடித்து மிரட்டியிருக்கிறார்.

பத்ரி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை குஷ்பூ தன் சொந்த தயாரிப்பில் தயாரித்திருக்கிறார். கதைப்படி காவல்துறை அதிகாரியாக இருக்கும் சுந்தர் சி தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளை பற்றி விசாரணை செய்கிறார். ஒவ்வொரு கொலை நடக்கும் போதும் அங்கு பட்டாம்பூச்சி ஓவியம் வரையப்பட்டிருக்கும்.

அந்த தடயத்தை வைத்து கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் அவர் இறுதியாக ஜெய் தான் அந்த கொலைகளை செய்வது என்று கண்டுபிடிக்கிறார். இதனால் ஜெய்க்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனாலும் ஜெய் தன்னுடைய தந்திரத்தின் மூலம் அதில் இருந்து தப்பித்து விடுகிறார்.

இதனால் சுந்தர் சி மீண்டும் ஜெய்யை கைது செய்ய தேவையான ஆதாரங்களை தேடுகிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பல திரைப்படங்களில் காதல் நாயகனாக மிகவும் அமைதியான கதாபாத்திரங்களில் பார்த்து வந்த ஜெய் இந்த படத்தில் நம்மை எல்லாம் மிரள வைத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் செய்யும் கொடூர கொலைகளை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சைக்கோ கொலைகாரனனாக நடித்திருக்கும் ஜெய் அதற்கேற்றவாறு தன்னுடைய நடிப்பை மாற்றி வித்தியாசமாக கொடுத்திருப்பது பாராட்ட வைக்கிறது.

அவருக்கு கொஞ்சமும் சளைக்காமல் சுந்தர் சி காவல்துறை அதிகாரியாக கலக்கியிருக்கிறார். டாம் அண்ட் ஜெர்ரி போன்று இருக்கும் அவர்களின் நடிப்பு தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது. முதல் பாதியில் பதட்டத்துடன், விறுவிறுப்புடனும் செல்லும் படம் இரண்டாம் பாதியில் சற்றே மெதுவாக நகர்வது போன்று இருக்கிறது.

அந்த வகையில் இயக்குனர் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி படம் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு பிறகு ஜெய்க்கு இதுபோன்ற வில்லன் கதாபாத்திரங்கள் தேடி வரும் என்பது மறுக்க முடியாதது. அந்த வரிசையில் இந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

Trending News