ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆர்யாவுக்கு தங்கையாக நடிக்க இருந்த நயன்தாரா.. ரகசியத்தை சொன்ன பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிகர் ஆர்யாவுடன் இணைந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த இரண்டு படங்களிலுமே அவர்களுடைய ஜோடிப்பொருத்தம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இருவருக்குமே பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி, ஆர்யா, நயன்தாரா குறித்த ஒரு ரகசியத்தை கூறியுள்ளார்.

அதாவது சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் பலனாக சுந்தர் சி அந்த அரண்மனை திரைப்படத்தை மூன்று பாகங்கள் வரை எடுத்து முடித்து விட்டார். அதில் முதல் பாகத்தில் சுந்தர் சி, ஆண்ட்ரியா, வினய், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அந்த முதல் பாகத்தில் சுந்தர் சி, ஆண்ட்ரியாவுக்கு அண்ணனாக நடித்திருப்பார். ஆனால் அந்த கேரக்டரில் சுந்தர் சி முதலில் ஆர்யாவை தான் நடிக்க வைக்க நினைத்தார். அதேபோல் ஆண்ட்ரியா நடித்த தங்கை கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க விரும்பினார்.

ஆனால் சில பல காரணங்களால் அந்த கேரக்டர்களில் சுந்தர் சி மற்றும் ஆண்ட்ரியா இருவரும் நடித்தனர். இந்த விஷயத்தை சுந்தர் சி ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒருவேளை ஆர்யா மற்றும் நயன்தாரா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்திருந்தால் அதை நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் அந்த ஜோடியின் கெமிஸ்ட்ரிக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். அந்த வகையில் சுந்தர் சி யின் முயற்சி நிச்சயம் தோல்வியில்தான் முடிந்திருக்கும். அதன்பிறகு அரண்மனை திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அவர் ஆர்யாவை நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Trending News