பிரபல நடிகை சன்னி லியோன் நடிப்பில் வெளியாகியுள்ள மதுபன் ஆல்பம் பாடலுக்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சாமியார்கள் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அமைச்சரும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அதன்படி மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே பாடலை தற்போது சரிகம என்ற இசை நிறுவனம் ரீமேக் செய்து ஆல்பம் பாடலாக வெளியிட்டுள்ளது. அந்த பாடலில் பிரபல நடிகை சன்னி லியோன் மிகவும் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலுக்கு மதுராவில் உள்ள சாமியார்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
காரணம் கிருஷ்ணருக்கும், ராதாவுக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடலுக்கு சன்னி லியோன் ஆபாச நடன அசைவுகளில் ஆடியுள்ளது தான். இதன் காரணமாக சன்னி லியோன் கவர்ச்சி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டார் என்று மதுராவில் இருக்கும் சாமியார்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.
ஆனால் இதனை அந்த நிறுவனம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா அந்நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “சிலர் தொடர்ந்து இந்து மத உணர்வை புண்படுத்துகிறார்கள்.
ராதாவுக்கு கோவில்கள் இருக்கிறது. நாங்கள் ராதாவை வணங்குகிறோம். இசையமைப்பாளர் சாகிப் தோஷி அவர் மதம் தொடர்பான பாடலை உருவாக்க வேண்டியது தானே. 3 நாட்களில் அந்த வீடியோவை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என கூறினார்.
ஆனால் இந்தப் பாட்டின் வரிகளையும், உள் கருத்தையும் அறியாத சன்னி லியோன் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். அவருக்கு இந்த கலாச்சாரம் தெரிய வாய்ப்பில்லை என்று சன்னி லியோனின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மதுபன் பாடலின் வரிகள் மற்றும் தலைப்பை மாற்றுவதாக சரிகம இசை நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த மூன்று நாட்களில் புதுப்பாடல் வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.