தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்கள் மிகவும் குறைவு. இதற்கு த்ரில்லர் படங்கள் மீதான மக்களின் ஆர்வம் இன்மையே காரணம். இருந்தபோதும் ஒவ்வொரு குற்றங்களையும் விசாரணை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்த நம்மை வியப்பில் ஆழ்த்திய ஐந்து த்ரில்லர் படங்களை பார்க்கலாம்.
சினேகிதியே: ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஜோதிகா, ஷப்ராணி முகர்ஜி, தபு, லட்சுமி, மனோரமா, வடிவுக்கரசி என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சினேகிதியே. திரில்லர் படமான சினேகிதியே படத்தில் பகை, ஏமாற்றம், பதற்றம், நம்பிக்கை என அனைத்தையும் பெற்றிருக்கும். காவல்துறை அதிகாரியாக தபு இப்படத்தில் துப்பறியும் காட்சி அனைவரையும் பிரமிக்கச் செய்தது.
பொம்மலாட்டம்: பாரதிராஜா இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொம்மலாட்டம். இப்படத்தில் அர்ஜுன், நானா படேகர், காஜல் அகர்வால், விவேக், ருக்மணி ஆகியோர் நடித்திருந்தார். இப்படத்தில் நானே புகழ் பெற்ற இயக்குனராக நடித்திருந்தார். இவர் இயக்கும் படத்தின் குழுவினர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை பற்றி விசாரணையை இப்படம் பின் தொடருகிறது.
உன்னைப்போல் ஒருவன்: சக்ரி டோலட்டியால் இயக்கப்பட்டு கமலஹாசன் மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து 2009ஆம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன். இப்படத்தில் ஒட்டு மொத்த போலீசையும் திணறடித்து, காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு ஏற்படுத்தி இருந்தார் கமல். தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் முறியடிக்கப்படவேண்டும் என்பதைச் சொல்லும் படம் உன்னை போல ஒருவன்.
யுத்தம் செய்: மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யுத்தம் செய். இளம் பெண்களை வேட்டையாடும் பெரும்புள்ளிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் நடுத்தர வர்க்க குடும்பத்தின் கதை யுத்தம் செய். சிபிசிஐடி ஆக சேரன் இப்படத்தில் விசாரணை நடத்தும் ஒவ்வொரு காட்சிகளும் கைதட்டல் பெற்றது.
குற்றம் 23: அருண் விஜய், மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2017 இல் வெளியான திரைப்படம் குற்றம் 23. செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நடைபெறும் பித்தலாட்டங்களையும் , மெடிக்கல் சயின்ஸ் எனும் பெயரில் அங்கு நடைபெறும் கிரைமை பற்றிய விஷயங்களையும் கருவாக உள்ளடக்கி வந்திருக்கும் படம் குற்றம் 23. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் துப்பறியும் காட்சி அனைவரையும் மிரள வைத்தது.