திரையுலகில் எந்த ஒரு படம் வெளியாக வேண்டுமானாலும், வெளியாவதற்கு முன்பு தணிக்கை குழுவினர் அந்த படத்தை பார்த்து தணிக்கை செய்த பின்னரே அப்படம் திரையரங்குகளில் வெளியாகும். அது மட்டுமின்றி அந்த படத்தை குழந்தைகள் பார்க்கலாமா கூடாதா என்பதையும் தணிக்கை குழுவினர் தான் முடிவு செய்வார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படம் குழந்தைகள் பார்க்க தகுதியற்ற படம் என கூறி தணிக்கை குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். சூர்யாவின் 39வது படமாக உருவாகி உள்ள இப்படத்தை இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதால் 18 வயதிற்கு குறைந்தவர்கள் படத்தை பார்க்க கூடாது என கூறி படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளார்கள்.
சூர்யாவின் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே சூர்யாவின் சில படங்களுக்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சூர்யா நடிப்பில் வெளியான நந்தா, பிதாமகன், ஆயுத எழுத்து, ஆறு, ரத்த சரித்திரம் தற்போது ஜெய்பீம் உள்ளிட்ட 6 படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் இந்த படங்கள் அனைத்திலும் வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதால் குழந்தைகள் பார்க்க கூடாது என கூறி இந்த படங்களுக்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். பொதுவாக படுக்கையறை காட்சிகளோ அல்லது வன்முறை காட்சிகளோ அதிகளவில் இருந்தால் மட்டுமே இதுபோன்ற தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி ஒரு முன்னணி நடிகரின் படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.