இந்தியாவில் சற்று குறைந்திருந்த கொரோனா வைரஸ் தாக்கம் சமீபகாலமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாததால் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. இன்னும் சில படங்கள் திரையரங்குகள் திறப்பதற்காக காத்துக்கொண்டிருக்கின்றன.
இருப்பினும் தமிழகத்தில் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பதே தெரியாததால் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி வெளியீட்டுக்கு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் 4 படங்களை அமேசான் நிறுவனத்தில் வெளியிட முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதன்படி இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே, தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம், சாரோவ் சண்முகம் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ஓ மை டாக், அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆகிய படங்கள் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளன.
அந்த வகையில் செப்டம்பரில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படமும், அக்டோபரில் உடன்பிறப்பே படமும், நவம்பரில் ஜெய் பீம் படமும், டிசம்பரில் ஓ மை டாக் படமும் வெளியாகவுள்ளன.
ஒரே சமயத்தில் தனது 4 படங்களை ஓடிடி நிறுவனத்திற்கு சூர்யா கொடுத்திருப்பது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படமும் ஓடிடியில் வெளியாயானது குறிப்பிடத்தக்கது.