
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்த செய்தி தற்போது தமிழ் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எப்படி வேண்டுமானாலும் காமெடி காட்சிகளை கொடுக்கலாம் என்பதில்லாமல் தன்னுடைய காமெடி காட்சிகளின் மூலம் மக்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக பல சமூக கருத்துக்களை சேர்த்து கொடுத்து வந்தார்.
முதல் நாள் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரானா வருவதை தடுக்க முடியாது எனவும், ஆனால் இந்த மருந்து கொரானாவிலிருந்து நம்முடைய உயிரை காப்பாற்றும் எனவும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார்.
அப்படி சொல்லி முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நீண்ட நேர சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை இயற்கை எய்தினார்.
இதற்காக தற்போது அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் தமிழ் மக்களும் தொடர்ந்து அவரது உடலைப் பார்க்க வந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் தம்பி கார்த்திக் உடன் முதல் ஆளாக தன்னுடைய இரங்கலை செலுத்த வந்துள்ளார். விவேக் சூர்யா கூட்டணியில் வெளியான சிங்கம் படத்தின் காமெடி காட்சிகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன.

மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது இரங்கலை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட விவேக் உடன் சிவாஜி படத்தில் நடித்ததை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.