சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படம் இவருக்கு முதல் படம் அல்ல. ஏற்கனவே தமிழில் இரண்டு படங்கள் நடித்துள்ளார்.
அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் உடன் சர்வமும் தாள மயம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவ்விரு படங்களைவிட சூரரைப்போற்று படம் மூலமாகவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அபர்ணா பாலமுரளி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2018ஆம் ஆண்டு ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, சன்யா மல்ஹோத்ரா நடிப்பில் அமித் ரவிந்த்ரநாத் இயக்கத்தில் வெளியான பதாய் ஹோ படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்றது. 28 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாகவும், அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சத்யராஜ் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் அப்பா கதாபாத்திரத்திலும், நடிகை ஊர்வசி அம்மா கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.
வீட்ல விஷேசங்க என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்தத் தலைப்பு பாக்யராஜிடம் இருப்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தலைப்பைப் பயன்படுத்த அனுமதி வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.