மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் 12வது விழா கொரோனா தொற்று காரணமாக இணையம் மூலமாக நடைபெற உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டிருப்பதாலும், விருது வழங்கும் விழா இணையம் மூலமாக மட்டும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த விழாவில் போட்டியிட உள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சிறந்த திரைப்படப் பிரிவில் தமிழின் சேத்து மான், நஸீர் ஆகிய படங்களும் மலையாளத்தின் தி கிரேட் இண்டியன் கிச்சன் படமும் போட்டியிடுகின்றன.
இதுதவிர சிறந்த இயக்குநர் பிரிவில் சூரரைப் போற்று பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிறந்த நடிகர் பிரிவில் சூர்யா பெயரும், நஸீர் படத்தில் நடித்த கௌமாரனே பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப்போற்று படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியானால் ஒரு படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ அதே வரவேற்பு இப்படத்திற்கு இருந்தது. மேலும் எப்போதும் இல்லாமல் இப்படத்திற்காக சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த அளவிற்கு ஒரு எதார்த்தமான நடிப்பை சூர்யா வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகரித்து வருவதால் வெப் சீரிஸ்களுக்கும் இம்முறை விருது வழங்கப்படவுள்ளது. சிறந்த சீரிஸ், சிறந்த நடிகர், நடிகை என 3 பிரிவுகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகை பிரிவில், ஃபேமலி மேன் 2வில் நடித்த நடிகை சமந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த விருது விழாவில் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்படும் படம், ஆஸ்திரேலிய அகாடமி விருதுகளில் பரிந்துரைக்கப்பட நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் 2 பிரிவுகளில் தகுதி பெற்றுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.