தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா துரோகி படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். விஷ்ணு விஷால் மற்றும் ஜீவா இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் மூலம் சுதா கொங்கரா பிரபல இயக்குனராக அறியப்பட்டார். பின்னர் குத்துச் சண்டையை மையப்படுத்தி வெளிவந்த இவரது இரண்டாவது படமான இறுதிச்சுற்று மாபெரும் வெற்றி பெற்றது. முன்னணி நடிகரான மாதவன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிஜவாழ்க்கையில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த அவரது மூன்றாவது படமான சூரரைப்போற்று படம் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றிப் படமாக உருவானது. பல மொழி ரசிகர்களும் இப்படத்தை பாராட்டி தள்ளினார்கள். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யாவும் பலரது பாராட்டைப் பெற்றார். மேலும் இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகச்சிறந்த நடிப்பாக பார்க்கப்பட்டது.
தற்போது சுதா கொங்கரா சூரறைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கும் பணியில் மிகவும் பிசியாக உள்ளார். இந்நிலையில் இப்படத்தை முடித்த பின்னர் நேரடி தமிழ் படம் ஒன்றை இயக்க உள்ளார். கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளாராம். தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம். நலன் குமாரசாமி ஆர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த படம் தள்ளிப்போனதால், தற்போது சுதா கொங்கரா படத்தில் எழுத்தாளராக பணியாற்றுகிறாராம்.