திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன்பே கணித்த சூர்யா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த டுவிஸ்ட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல கோடி வசூலை வாரி குவித்து வரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதிலும் முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்களுக்கு மட்டும் வரும் சூர்யாவின் கதாபாத்திரம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து இருக்கும் சூர்யா 24 என்ற திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

அந்த வில்லத்தனத்தை எல்லாம் தாண்டும் அளவுக்கு விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கும் அவருடைய நடிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரை இப்படி ஒரு கேரக்டரில் எதிர்பாராத ரசிகர்கள் அவரின் வில்லத்தனத்தை கொண்டாடி வருகின்றனர்.

படம் முழுவதிலும் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஸ்கோர் செய்தாலும் வெறும் ஐந்து நிமிடங்களில் அதையெல்லாம் ஈடு செய்யும் அளவுக்கு சூர்யாவின் நடிப்பு இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவர் இப்படி வில்லத்தனமாக நடிப்பேன் என்று சில வருடங்களுக்கு முன்பே கணித்தது தான் ஆச்சரியமான விஷயம்.

அதாவது கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் லிங்குசாமி, சூர்யாவிடம் நீங்கள் உங்கள் தம்பி கார்த்தியுடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சூர்யா எங்கள் வீட்டில் நான் எப்போதும் சைலன்ட் வில்லனாகவும், கார்த்தி நல்ல பையன் ஆகவும், அப்பாவுக்கு பிடித்த மாதிரியும் இருப்பார் என்று கூறினார். ஒருவேளை நாங்கள் இணைந்து நடிக்க வேண்டுமென்றால் நான் நெற்றியில் விபூதி பட்டை போட்டு நடிக்கும் கார்த்திக்கு வில்லனாக நடிக்க ஆசை என்று கூறியிருந்தார்.

தற்போது அந்த விஷயம் இந்த விக்ரம் திரைப்படத்தில் நடந்துள்ளது. போதைப் பொருள் விற்பனையில் நஷ்டத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக கமல், பகத் பாசில், கைதி படத்தில் வரும் கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் அமைந்தது. இதற்கு பின்னணியில் இருக்கும் வில்லனாக சூர்யா நடித்து இருக்கிறார்.

மேலும் விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் மூலம் கைதி 2, விக்ரம் 3 போன்ற படங்கள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அந்த வகையில் சூர்யாவின் மிரட்டலான வில்லத்தனம் தொடருமா என்ற ஒரு ஆர்வம் கலந்த ட்விஸ்ட்டும் இருக்கிறது. இதற்காக அவரின் ரசிகர்கள் தற்போது மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சூர்யாவின் ஆசை நிறைவேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News