சினிமாவை வெறும் சினிமாவாக மட்டும் பார்க்காமல் எப்போது அதில் அரசியல் தலையீடு உண்டாகிறதோ அப்போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு எதிராக பா.ம.க., கட்சியினரும், வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது இது அப்படியோ நடிகர் சூர்யா பக்கம் திரும்பி உள்ளது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான படம் தான் ஜெய் பீம். பலரும் இந்த படத்தை பாராட்டி வந்த நிலையில், திடீரென படத்திற்கு எதிராக ஒரு குரல் ஒலித்தது. படத்தில் வன்னியர் சமுதாயத்தை குறிக்கும் நோக்கில் அக்னி கலசம் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்கள். இதனையடுத்து அந்த படம் நீக்கப்பட்டது.
பின்னர் படத்தில் காவல் துறை அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்று இருந்ததற்கும், அக்னி கலசப் படம் இடம் பெற்றதற்கும் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, சூர்யாவுக்கு கேள்வி எழுப்பி கடிதமும் எழுதினார். இதனையடுத்து, அன்புமணிக்கு விளக்கம் அளித்து சூர்யா கடிதம் எழுதினார். ஆனாலும், அதனை ஏற்க மறுத்த பா.ம.க உறுப்பினர்கள் சூர்யாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பா.ம.க மாவட்டச் செயலாளர் அறிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்காக சூர்யா 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அடுத்தடுத்து சூர்யாவிற்கு எதிராக பிரச்சனைகள் வலுக்கும் நிலையில் ரசிகர்கள் சூர்யாவிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
தற்போது, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #westandwithsuriya என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சூர்யா எந்த தவறும் செய்யவில்லை, அவர் ஒரு நடிகனாக அவரது கடமையை செய்துள்ளார். கடவுள் அவர் பக்கம் உள்ளது போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.