தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூரரைப்போற்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் தியேட்டரில் வெளியானது போல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா புதிய படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்திலும், ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
சூர்யாவின் பிறந்த நாளான நேற்று எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதில் முன்னாள் பத்திரிக்கையாளரான ஞானவேல் இயக்கும் ஜெய் பீம் படத்தில் பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் முதல் முறையாக படம் முழுவதும் துளிகூட மேக்கப் இல்லாமல் சூர்யா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புதுப்படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும், இது போன்ற சுவாரஸ்ய தகவல்களும் வெளிவருவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.