ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய 5 படங்கள்.. முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 3 நடிகர்கள்

மாஸ்டர்: 2021 ல் ஆரம்பத்திலேயே பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது மாஸ்டர் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். உலகளவில் மாஸ்டர் திரைப்படம் 250 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது. தமிழகத்தில் 145 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவித்தார்கள். மாஸ்டர் திரைப்படம் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்து தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த படம் என்ற புதிய சாதனையை மாஸ்டர் படம் பிடித்தது.

அண்ணாத்த: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் தீபாவளியன்று நவம்பர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்தை கடந்த நிலையில் உலக அளவில் 150 கோடி வசூல் செய்துள்ளது. அண்ணாத்த படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் இரண்டாவது இடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

டாக்டர்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய் ஆகியோர் நடிப்பில் அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியானது. டாக்டர் படம் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே தமிழ் திரையரங்கு வசூலில் 70 கோடிகளை வசூலித்த படம் என்ற பெருமை டாக்டர் படத்திற்கு கிடைத்துள்ளது.

கர்ணன்: தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை கர்ணன் திரைப்படம் பெற்றது. இப்படம் உலக அளவில் 70 கோடி வசூல் செய்தது.

மாநாடு: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சிம்புவின் முந்தைய படங்களில் முதல் நாள் வசூலை மாநாடு திரைப்படம் முறியடித்துள்ளது. தற்போது வரை உலக அளவில் மாநாடு திரைப்படம் 60 கோடி வசூல் செய்துள்ளது. மாநாடு படம் தற்போதும் வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Trending News