புதன்கிழமை, ஜனவரி 15, 2025

துணைக் கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் நடிகர்களான 6 பேர்.. தொட முடியாத உச்சத்தில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கிற எல்லோருமே ஒரு கால கட்டத்தில் துணை நடிகர்களாக நடித்து வந்தவர்கள். அப்படி துணை நடிகர்களாக அறிமுகமாகி இன்றைக்கு ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்ற ஆறு முக்கியமான நடிகர், நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி அப்படியே படிப்படியாக சினிமா துறையில் நுழைந்து இன்றைக்கு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது திறமையை பார்த்த நடிகர் தனுஷ் தன்னுடைய 3 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை தனது நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில், அதன்பின் அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தினார்.

திரிஷா: தென்னிந்திய அழகி பட்டம் வென்ற திரிஷா முதல் முதலில் 1999 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் வருவார். அப்போது சிம்ரனை பார்த்த ரசிகர்கள் திரிஷாவை பார்க்க மறந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். இதனிடையே திரிஷா லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து கனவுக் கன்னியாக இடம் பிடித்து இன்றுவரை தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி: தற்போது வில்லன்,கதாநாயகன், துணை நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் சேதுபதி, தனுஷின் புதுப்பேட்டை திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆன நிலையில் விஜய்சேதுபதி திரை வாழ்க்கையில் நுழைவதற்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இதன் பின்னர் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்றுள்ளார் விஜய் சேதுபதி.

சந்தானம்: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை நடிகராக வலம் வந்த சந்தானம், தன்னுடைய வெளிப்படையான காமெடி பேச்சை வெளிப்படுத்தி தொலைக்காட்சி ரசிகர்களை ஈர்த்தார். இதனைக்கண்ட நடிகர் சிம்பு தனது மன்மதன் திரைப்படத்தில் சந்தானத்தை துணை நடிகராக அறிமுகம் செய்துவைத்தார். மன்மதன் திரைப்படத்தில் சிம்புவின் நண்பராக நடித்த சந்தானம் ஒரு சில காட்சிகளில் மட்டும் தன்னுடைய காமெடி நடிப்பை வெளிப்படுத்தினார். இத்திரைப்படத்திற்குப் பின் பல நடிகர்களின் நண்பராக சந்தானம் நகைச்சுவை நாயகனாக வலம் வந்து தற்போது ஹீரோக்கள் லிஸ்டில் சேர்ந்துள்ளார்.

ஜோதிகா: இயக்குனர் எஸ். ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த வாலி திரைப்படத்தில் அஜித்தின் முன்னாள் காதலியாக நடித்திருப்பார் ஜோதிகா. சோனா கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகா ஒரு பாடலில் மட்டும் வந்து தன் அழகின் மூலம் ரசிகர்களை கொள்ளை அடித்து சென்றார். அது மட்டுமில்லாமல் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் தன்னுடைய முதல் தமிழ் படத்தில் ஜோதிகா பெற்றார். இதன் பின்னர் எஸ் ஜே சூர்யா ஜோதிகாவை குஷி படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்துவைத்தார். விஜயோடு சேர்ந்து நடித்த ஜோதிகா இந்த திரைப்படத்தில் புதுமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். திருமணமாகி சில காலம் ஜோதிகா படங்களில் நடிக்காத நிலையில், தற்போது சமூக கருத்துக்களை கொண்டு பல படங்களில் கதாநாயகியாக நடித்து இன்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மாதவன்: தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சாக்லேட் பாய் எனும் பட்டத்தை தட்டிச் சென்ற மாதவன். இன்றுவரை தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் அறிமுகமாகி தற்போது பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Trending News