தமிழ் சினிமாவில் திரைப்படங்களுக்கு ஏற்றவாறு கதாநாயகனை தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள், சில சமயங்களில் நடிகர்களுக்காக கதை எழுதுகிறார்கள். அவ்வாறு சில நடிகர்களுக்காக எழுதப்பட்ட கதையில் அந்த நடிகர் நடிக்க முடியாமல் வேறு ஒரு நடிகர் நடித்து படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிறது. நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் சில படங்களில் வேறு கதாநாயகர்களை முதலில் தேர்வு செய்துள்ளார்கள். சில காரணங்களால் அந்த நடிகர் நடிக்க முடியாமல் அந்த படங்கள் வேறு நடிகர்களுக்கு சென்று படம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது.அந்த வகையில் தமிழ் நடிகர்கள் தவறவிட்ட படங்களை பார்க்கலாம்.
முதல்வன்: ஷங்கர் இயக்கத்தில் 1999 இல் வெளியான திரைப்படம் முதல்வன். இப்படம் முழுமையும் அரசியல், ஊழலைப் பற்றியும் எடுக்கப்பட்டது. சாதாரண மனிதனுக்கு ஒரு நாள் முதல்வன் ஆக வாய்ப்பு கிடைத்தால் அவர் என்ன செய்வார் என்பதையும், அவர் அரசியலில் இருக்கும் போது வரும் இடையூறு மற்றும் இழப்புகள் ஏற்படும் என்பதையும் பிரம்மாண்டமாக சொல்லியிருந்தார் ஷங்கர். இப்படத்தின் வாய்ப்பு முதலில் ரஜினிக்கு வந்தது. அப்போது இது அரசியல் படம் என்பதால் ரஜினி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். பின்பு பல நடிகர்களிடம் இந்த வாய்ப்பு செல்ல அவர்களும் மறுக்க, கடைசியில் அர்ஜுன் படத்தில் நடித்து படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
நான் கடவுள்: பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2009-ல் வெளியான திரைப்படம் நான் கடவுள். இப்படத்தில் ஆர்யா அகோரி ஆக நடித்து இருப்பார். இப்படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. பாலாவின் இயக்கத்தில் நந்தா மற்றும் நான் கடவுள் படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. நான் கடவுள் படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து, நீளமான முடியை வளர்த்திருந்தார். பின்பு அப்படத்திலிருந்து அஜித் நீக்கப்பட்டார். இப்படத்திற்காக வாங்கிய ஒரு கோடி ரூபாய் அட்வான்சை பாலாவிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். இதுவரை பாலாவின் படத்தில் அஜித் நடித்ததில்லை.
தூள்: தரணி இயக்கத்தில் 2003 இல் வெளியான திரைப்படம் தூள். இப்படத்தில் விக்ரம் ரீமாசென் ஜோதிகா, விவேக் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் அரசியல் சார்ந்து கமர்சியல் படமாக எடுக்கப்பட்டது இப்படத்தில் முதலில் தளபதி விஜய் நடிப்பதாக இருந்தது. அவர் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இப்படத்தின் வாய்ப்பு விக்ரமுக்கு கிடைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது.
துள்ளாத மனமும் துள்ளும்: எழில் இயக்கத்தில் 1999 இல் வெளியான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்படம் தளபதி விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் கதை முதலில் வடிவேலுகாக எழுதப்பட்டது. இப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக இப்படத்தில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டது வடிவேலு என பல பேட்டிகளில் இயக்குனர் எழில் கூறியுள்ளார்.
கைதி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 இல் வெளியான திரைப்படம் கைதி. ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் கைதி. இப்படத்தின் கதையை இயக்குனர் வில்லன் நடிகர் மன்சூர் அலிகானை நினைவில் வைத்து எழுதினாராம். பின்பு தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் மன்சூர் அலிகானுக்கு பதில் இப்படத்தில் கார்த்திக நடித்தார். நல்ல கதையுடன் கூடிய தரமான படம் என்பதால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
கோ: கேவி ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளியான திரைப்படம் கோ. இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்திருந்தார். இப்படத்தில் முதலில் சிம்பு தேர்வு செய்யப்பட்டு படத்தில் கமிட்டானார். தயாரிப்பாளரிடம் சிம்பு அவருக்கு ஜோடியாக தமன்னாவை போடச் சொன்னார். இயக்குனர் அதற்கு சம்மதிக்காததால் இப்படத்திலிருந்து சிம்பு விலகினார். பிறகு ஜீவா, கார்த்திகா நாயர், அஜ்மல் நடித்து படம் செம ஹிட்டானது.