ஒவ்வொரு காலகட்டத்தில் வரும் படங்கள் அந்தந்த காலகட்ட இளைஞர்களை பிரதிபலிப்பவை. அவ்வகையில் இப்படங்கள் காதல் என்றதும் ஞாபகம் வருபவை.
அலைகள் ஓய்வதில்லை
சாதி விட்டு சாதி என்பது இன்றைக்கே அடிதடியாய் இருக்கிறபோது, மதம் விட்டு மதம் காதலைச் சொன்ன ட்ரெண்ட் செட்டர் படம். காதலுக்கு மதமெல்லாம் முக்கியமில்லை என்று முகத்திலறைந்து சொன்ன, இந்தப் படத்தின் காதல் காட்சிகள் க்ளாஸிக் ரகம்.
புன்னகை மன்னன்
ஏக் துஜே கேலியே-வில் காதலர்கள் தற்கொலை செய்வதாய் காட்டியதால் தனக்குத் தானே வருந்திய கே.பாலசந்தர், தற்கொலையில் ஆரம்பித்து அதையும் மீறி உனக்கென ஒருத்தி / ஒருத்தன் இருப்பார்கள் என்று சொன்ன படம். ‘என்ன சத்தம் இந்த நேரம்’ இன்றைக்கும் கேட்கமுடிகிற மேஜிக் மெலடி. காதல் தோல்வியால் உர்ரென்று இருக்கும் கமலை, ரேவதி டீல் செய்யும் விதம் அலாதி.
காதல் கோட்டை
பார்க்காமலே காதல் என்கிற ட்ரெண்ட்டை செட் பண்ணிய ப்ளாக் பஸ்டர். இவர்தான் அவர் என்று தெரியாமல் தேவயானி, அஜீத்தின் ஆட்டோவிலேயே பயணிக்கிற காட்சிகளில் தியேட்டரில் ரசிகனுக்கு ஏறியது பிபி.
மௌனராகம்
இன்றைய ராஜா ராணியின் தாத்தா. கல்யாணத்தில் ஆரம்பிக்கற படம், ஃப்ளாஷ்பேக்கில் சொல்லும் காதல் க்ளாஸ் & மாஸ். சந்திரமௌலி.. மிஸ்டர் சந்திரமௌலி என்று துறுதுறு கார்த்திக், ரேவதியிடம் காதலை சொல்லும் விதத்தை இன்றைக்கும் படமெடுக்கும் இயக்குனர்கள் பாடமாக வைத்துக் கொள்ளலாம்.
அலைபாயுதே
இயக்குனர் மணிரத்னம் அவர்களின் landmark என இப்படத்தைக் கூறலாம். மாதவன், ஷாலினியின் அற்புதமான நடிப்பில் இப்படம் மெகாஹிட். இப்படத்தில் வரும் ” உன்னை நான் விரும்பல, நீ அழகா இருக்கன்னு நினைக்கல,……..” எனும் வசனம் இன்று வரை பிரபலம். வீட்டிற்கு தெரியாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளும் டிரெண்டை உருவாக்கியது இப்படம்தான். இப்படம் மட்டுமல்லாமல் ஏ.ஆர்.ஆர் இசையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்!
காதலர் தினம்
இண்டெர்நெட்டில் காதல் என்கிற கான்செப்டை அறிமுகம் செய்தது இப்படத்தின் இயக்குனர் கதிர்தான். குணால், சோனாலி நடிப்பில் வந்த இப்படத்தின் தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்போது அனைத்து காதல்களுமே இண்டெர்நெட்டில்தான் என்றால் அதற்கு ஆரம்பப் புள்ளி கதிர்தான்! இப்படத்திலும் ஏ.ஆர்.ஆர் தன் மாயாஜால இசையால் அனைவரையும் மயக்கி இருக்கிறார்.
ராஜா ராணி
அட்லீ இயக்கத்தில் வெளிவந்து பல ரசிகர்களை ஈர்த்த படம் ராஜா ராணி. நயன் தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பின்னி எடுத்திருப்பார்கள். இப்படத்தில் சத்யாராஜ் போல அப்பா ஒவ்வொருவருக்கும் வேண்டும்! நயன் தாரா அழுத காட்சி, நஸ்ரியா விபத்து என நம்மை கதற வைக்கும் காட்சிகள் சில. “Brother” என்ற ஒற்றைச் சொல் இவ்வளவு பிரபலமாகுமா??? ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரமாதம்.
பிரேமம்
அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஆட்டோகிராஃப் சாயலோடு எடுக்கப்பட்ட இப்படம் கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், கல்லூரிக்குப் பிறகான பருவம் என மூன்று பருவங்களின் காதலைச் சொல்லும் படம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா என அனைவரும் படத்தை அலங்கரித்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசையில் ‘மலரே’ பாடல் மிகப் பிரபலம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடந்து சென்ற காதல்களை நினைவுபடுத்தும் படம்! நம்ம சேரனின் ஆட்டோகிராஃபின் மாடர்ன் வெர்ஷன்!
சில்லுனு ஒரு காதல்
சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு முன்பு நடித்த கடைசிப் படம். திருமணத்திற்கு பிறகு உருவாகும் காதலும், பந்தமும் நீடித்து நிலைக்கும் என்பதே இப்படத்தின் தீம். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகிய இப்படம் சூர்யா, ஜோதிகாவின் நிஜ வாழ்க்கையைப் பிர்திபலிப்பதைப் போன்று என்ற கருத்து நிலவுகிறது. ஏ.ஆர்.ஆர் இசையமைப்பில் பாடல்கள் அலுத்துப் போகாது.
காதலுக்கு மரியாதை
ஃபாசில் இயக்கத்தில் தமிழில் “காதலுக்கு மரியாதை”யும், மலையாளத்தில் ” அனியத்திப்பிராவு”ம் இரு மொழிகளிலும் ஹிட். விஜய்-ஷாலினி தமிழிலும், குஞ்சாக்கோ போபன்-ஷாலினி மலையாளத்திலும் அசத்தி இருப்பார்கள். காதலைவிட உறவுகள் முக்கியம் என்பது கதைக்கரு.
“காதலுக்கு அழிவில்லை” அனைத்துப் படங்களும் இறுதியில் கூறும் கருத்து இதுதான். இதுபோல எண்ணற்ற படங்கள் இன்னும் உள்ளன. காதல் என்பது கடைசி உயிர் பூமியில் வாழும்வரை நிலைத்திருக்கும்!