சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இயக்குனராக அறிமுகமாகி நடிகரான 10 பிரபலங்கள்.. பாக்யராஜ் முதல் சசிகுமார் வரை

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் இயக்குவது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இயக்கத்தில் தங்களை நிரூபித்த சில இயக்குனர்கள் நல்ல நடிகராகவும் மாறியுள்ளார்கள். அவ்வாறு இயக்கத்தில் இருந்து நடிகராக ஜொலித்த பிரபலங்களை பார்க்கலாம்.

கே.பாக்யராஜ்: இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பாரதிராஜாவிடம் இயக்குனராக பணியாற்றியவர் பாக்யராஜ். இவர் சுவரில்லாத சித்திரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற பல வெற்றி படங்கள் இயற்றியுள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் பாக்யராஜ் கதாநாயகனாக அறிமுகமானார்.

பார்த்திபன்: கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பார்த்திபன். புதிய பாதை படத்தில் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்த்திபன். இப்படத்துக்கு சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.

சேரன்: சேரன் உதவி இயக்குனராக பணியாற்றி பின்பு பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி போன்ற வெற்றிப் படங்களை இயக்கியிருந்தார். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தின் மூலம் சேரன் கதாநாயகனாக அறிமுகமானார்.

சுந்தர்.சி: ஆரம்ப காலத்தில் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றி முறை மாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், மேட்டுக்குடி, வின்னர், அரண்மனை போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். சுந்தர் சி 2006 வெளியான தலைநகரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

எஸ்ஜே சூர்யா: அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு விஜய்யின் குஷி படத்தை இயக்கியிருந்தார். 2004 இல் வெளியான நியூ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது வில்லன், குணச்சித்திர நடிகர் என பட்டையைக் கிளப்புகிறார்.

அமீர்: பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அமீர். தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு, ராம், பருத்திவீரன், ஆதிபகவான் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். 2009ல் வெளியான யோகி படத்தின் மூலம் அமீர் கதாநாயகனாக அறிமுகமானார்.

மிஸ்கின்: இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கியிருந்தார். 2010ல் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

ராம்: இயக்குனர் தங்கர்பச்சனயிடம் சிறிது காலம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் ராம். இவர் 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராம் தங்க மீன்கள் படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.

சமுத்திரக்கனி: உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரகனி. அதன் பின்பு நாடோடிகள், நிமிர்ந்து நில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். 2012ல் வெளியான சாட்டை படத்தின் மூலம் சமுத்திரகனி கதாநாயகனாக அறிமுகமானார்.

சசிகுமார்: பாலா, அமீர் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் சசிகுமார். அதன்பிறகு 2008ல் வெளியான சுப்பிரமணியம் படத்தின் மூலம் சசிகுமார் இயக்குனராக அறிமுகமானார். சசிகுமார் பல படங்களில் நடித்திருந்தாலும் 2009ல் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Trending News