இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதையடுத்து ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் நாடுமுழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சித்ராஞ்சலி 75 ஓர் பிளாட்டினம் பனோரமா என்ற பெயரில் கண்காட்சி ஒன்றை புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
இதில் சினிமா மூலமாக சமூக மாற்றத்தை ஏற்படுத்திய, மற்றும் சுதந்திர போராட்டத்தை தெரியப்படுத்திய 75 படங்களை வெளியிட்டுள்ளார்கள். இதில் தமிழிலிருந்து 9 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சினிமா லென்ஸ் வழியே சுதந்திரப் போராட்டம் என்ற தலைப்பில், சிவாஜி கனெக்ஷன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படமும், சமூக மாற்றத்தை ஏற்படுத்திய படங்கள் என்ற தலைப்பில் ஐந்து படங்கள் இடம்பெற்றன.
அவையாவன, கே.சுப்பிரமணியம் இயக்கிய சேவா சாத்தான், தியாக பூமி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான அந்த நாள், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா நடிப்பில் வெளியான நம் நாடு, கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான ஹே ராம் ஆகிய படங்கள் இடம்பெற்றன.
இது தவிர சுதந்திர போராட்ட வீரர்களை வணங்குவோம் என்ற தலைப்பில் தாதாமிராஸி இயக்கிய இரத்ததிலகம், மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி நடித்து மாபெரும் வெற்றியடைந்த ரோஜா, ராதாமோகன் இயக்கத்தில் நாகார்ஜுனா, சனாகான் நடிப்பில் வெளியான பயணம் ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதுதவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்,கன்னடம், மராத்தி, பெங்காலி, அசாமி, குஜராத்தி, பஞ்சாபி, ஓடியா என மொத்தம் 75 படங்கள் இடம்பெற்றிருந்தது.