தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவர் தமிழகத்தை பல நலத் திட்டங்களால் பட்டை தீட்டி, இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாற்றி காட்டியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு கொரோனாவால் நாடு முழுவதும் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டு, பொது முடக்கத்தால் பலரும் வேலை இழந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர், ஏழை எளிய மக்களுக்கு 6 மாதங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி உதவி செய்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 ரொக்கப் பணத்தையும், சிறப்பு பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றையும் தமிழக அரசின் சார்பில் வழங்கவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கடந்த மாதம் அறிவித்தார்.
தற்போது மாநிலம் முழுவதும் இந்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று அமல்படுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதோடு, பொதுமக்கள் அனைவருக்கும் முன்கூட்டியே டோக்கன் சரியான முறையில் வழங்கப்பட்டிருந்ததால், எவ்விதமான இடையூறுமின்றி மக்கள் அனைவரும் வரிசையில் காத்திருந்து பொங்கல் தொகுப்பை பெற்று சென்றனர். அதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும்கூட விடப்பட்டவர்கள் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வருடாவருடம் பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வருடம் பொது முடக்க காலத்திலும், இந்தத் தை பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி தர வேண்டும் என்ற நோக்கில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரொக்கத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தியுள்ளார். இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி செல்லும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியின் திளைத்துள்ளனர்.
மேலும் பேரிடர் காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலும், தமிழக மக்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்காக சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கியுள்ள தமிழக முதல்வருக்கு, தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர் தமிழக மக்கள்.