தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பல சூப்பர் ஹிட் படங்களின் கதைகளை ஒதுக்கிய வரலாறு அனைவருக்குமே தெரிந்ததுதான். இது ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பலருக்கும் நடந்துள்ளது. இந்த மாதிரி முன்னணி நடிகர்கள் மிஸ் செய்த படங்கள் வேறு ஒரு நடிகரின் நடிப்பில் வெளியாகி எதார்த்தமாக பெரிய வெற்றியைப் பெற்று விடும்.
அதன்பிறகு முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் அந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு படம் தான் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி. ஏ எம் ரத்னம் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
ஒரு காலனியில் வாழும் இளைஞர்களின் காதல் கதையை யதார்த்தமாக பதிவு செய்திருந்தார் செல்வராகவன். போதாக்குறைக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
நாயகியாக சோனியா அகர்வாலுக்கு இந்த திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு அவரும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார் என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆனால் முதன்முதலில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடிக்க இருந்த நடிகர்கள் சூர்யா மற்றும் மாதவன் தானாம்.
அப்போது சூர்யா பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்திலும், அதேபோல் மாதவனும் பிரியமான தோழி படத்திலும் பிசியாக இருந்ததால் எதேர்ச்சியாக ரவிகிருஷ்ணாவை பார்த்து ஓகே செய்தாராம் செல்வராகவன். ரவிகிருஷ்ணா பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மகன் என்பதும் கூடுதல் தகவல்.
ரவி கிருஷ்ணா நடிப்பில் 7ஜி ரெயின்போ காலனி படத்தை பார்த்த பிறகு முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் மாதவன் நடித்திருந்தாலும் படம் இவ்வளவு எதார்த்தமாக வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த தகவலை ரவிகிருஷ்ணாவே விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும் போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.