புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர் என்று பன்முக திறமையில் கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வலிமை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த போனிகபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 திரைப் படத்தின் ரீமேக்கான இதில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ஆரி அர்ஜுனன், தன்யா, சிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலின் நேர்மையான காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

தற்போது சமூகத்தில் நிலவும் ஜாதி பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்றிருந்த வசனங்களும் உதயநிதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. வரும் மே 20ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளில் இப்போது படக்குழுவினர் மும்முரமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் உதயநிதியின் தந்தையும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை நேற்று இரவு பார்த்துள்ளார். அப்போது போனிகபூர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் முதல்வருடன் சேர்ந்து படத்தை பார்த்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் முதல்வர் படத்தை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் அப்போது டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் முதல்வரால் படத்தை பார்க்க இயலவில்லை.

தற்போது ரிலீசுக்கு தயாரான நிலையில் இருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்த முதல்வர் படக்குழுவினர் அனைவரையும் மனதார பாராட்டி உள்ளார். அதுமட்டுமல்லாமல் இதில் மிக சிறப்பாக நடித்துள்ள தன் மகனை அவர் மிகவும் பெருமையுடன் பாராட்டி இருக்கிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Trending News