பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது அவரது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மிக நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்து ஒளிப்பதிவாளர்கள் விலகி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக நானே வருவேன் படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், அவருக்கு பதில் சாணிக் காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி ஒப்பந்தமானார்.
இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் படம் மூலம் நடிக்கவும் தொடங்கியுள்ளார். இந்நிலையில் தான் சாணிக்காயிதம் படத்தில் யாமினி பணியாற்றிய விதம் செல்வராகவனுக்கு பிடித்து போகவே நானே வருவேன் படத்திற்கும் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் தற்போது அரவிந்தை தொடர்ந்து யாமினியும் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள யாமினி கூறியிருப்பதாவது, “செல்வராகவனுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் நானே வருவேன் படத்தில் இருந்து நான் விலகுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி” என கூறியுள்ளார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு ஒளிப்பதிவாளர்கள் படத்தில் இருந்து விலகி உள்ளது படப்பிடிப்பு பணியில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் கேமரா மேன்கள் மற்றும் டெக்னீசியன்களும் படத்தில் இருந்து விலகி வருவதாக கூறப்படுகிறது.
அண்ணன் படம் என்பதால் நடிகர் தனுஷின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், நிறைய விஷயங்களில் அவர் தலையிட்டு வருவதாலும் தான் இதுபோன்று அடுத்தடுத்து நபர்கள் வெளியேறி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.