முறிந்த திருமணம், துரத்திய ரெட் கார்டு.. வலிகளைத் தாண்டி திவ்யா கணேஷ் சாதித்தது எப்படி?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ரூட் பிஹேவியர் என விமர்சிக்கப்பட்ட திவ்யா கணேஷ், இன்று மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறார். தோல்விகள், அவமானங்கள் மற்றும் முறிந்த திருமணம் என அவர் கடந்த வந்த கரடுமுரடான பாதையைத் தெரிந்துகொண்டால், அவரது இன்றைய மன உறுதி வியக்க வைக்கும்.
ராமநாதபுரத்தில் ஒரு பெரிய வசதியான குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தவர் திவ்யா கணேஷ். இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள் என அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க, திவ்யாவிற்கு மட்டும் படிப்பு எட்டாக்கனியாகவே இருந்தது. வழக்கறிஞராகவோ அல்லது நீதிபதியாகவோ ஆக வேண்டும் என்ற லட்சியம் அவரிடம் இருந்தது. ஆனால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தபோது, சுற்றியிருந்த உலகம் அவரை ஏளனம் செய்தது. "நீ எதற்கும் லாயக்கில்லை" எனச் சொந்த குடும்பமே வன்மத்தைக் கொட்டியது. ஆனால், சோர்ந்து போகாத திவ்யா, விடாமுயற்சியுடன் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதுவே அவர் வாழ்க்கையின் முதல் போராட்ட வெற்றி.
உயர்கல்விக்காக சென்னை செல்ல வேண்டும் என்ற அவரது ஆசைக்கு ஆரம்பத்தில் தடை விழுந்தது. ராமநாதபுரத்திலேயே கல்லூரியில் சேர்ந்தாலும், விதி அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. கர்ப்பமாக இருந்த தனது இரண்டாவது அக்காவைக் கவனித்துக்கொள்ள சென்னை வந்த திவ்யாவிற்கு, 'விஸ்காம்' படிப்பு மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் மூலம் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 'பிரியமானவளே' சீரியலில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக (உமா கதாபாத்திரம்) அறிமுகமானார். இளம் வயதிலேயே தாயாக நடிக்க ஒப்புக்கொண்ட அவரது அர்ப்பணிப்பு அப்போதே பாராட்டப்பட்டது.
திவ்யாவின் திரைப்பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் சீரியல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவருக்கு 'ரெட் கார்டு' (Red Card) வழங்கப்பட்டு, வாய்ப்புகள் பறிபோனது. மன உளைச்சலுக்கு ஆளான அவர், இனி சீரியலே வேண்டாம் என முடிவெடுத்தார். அந்த இக்கட்டான சூழலில் தான் 'பாக்கியலட்சுமி' சீரியலில் 'ஜெனி' கதாபாத்திரம் அவருக்குக் கிடைத்தது. மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ஒவ்வொரு இல்லத்தரசியின் மனதிலும் இடம்பிடித்தார்.
திவ்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியது நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் உடனான நிச்சயதார்த்தம். ஊடகங்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், திடீரென கருத்து வேறுபாடு காரணமாக அந்தத் திருமணம் நின்று போனது. இந்த விவகாரத்தில் திவ்யா மீது தேவையற்ற பழிகள் சுமத்தப்பட்டன. அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர அவருக்கு நீண்ட காலம் பிடித்தது.
இத்தனை வலிகளையும் ரணங்களையும் சுமந்து கொண்டு தான் திவ்யா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். தொடக்கத்தில் அவர் காட்டிய ஆட்டிட்யூட் பலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவர் சந்தித்த துரோகங்களும் அவமானங்களும் தான் அவரை இவ்வளவு உறுதியான பெண்ணாக மாற்றியுள்ளது என்பதை ரசிகர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். யாரிடமும் வளைந்து கொடுக்காத நேர்மை, எதற்கும் அஞ்சாத குணம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் தற்போது பிக் பாஸ் சீசன் 9-ன் டாப் போட்டியாளர்களில் ஒருவராக திவ்யா கணேஷ் திகழ்கிறார். இணையத்தில் அவருக்கு "டைட்டில் வின்னர்" தகுதி இருப்பதாகக் கூறி ரசிகர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
