1. Home
  2. தொலைக்காட்சி

பிக்பாஸ் வீட்டில் பார்வதி கம்ருதீன் அத்துமீறல்கள்.. விஜய் சேதுபதி ஏன் மௌனம்?

parvathi-kamurdin

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக மைக் மறைத்து 'அடல்ட் கன்டென்ட்' பேசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. அதில் முக்கியமாக பேசுபொருளாகி வருவது வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய இரு போட்டியாளர்களின் செயல்பாடுகள். நெட்டிசன்கள் இவர்களின் உரையாடல்களை 'அடல்ட் கன்டென்ட்'  என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

கம்ருதீன் உடன் தனிப்பட்ட முறையில் பேசும் போது பார்வதி பல முறை தனது சட்டையால் அல்லது கையால் மைக்கை மறைத்து பேசியுள்ளார். இது நிகழ்ச்சி விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.

இந்த விதிமீறலுக்காக பிக்பாஸ் ஏற்கனவே அவர்களுக்கு எச்சரிக்கை  கொடுத்தும், இந்த போக்கு தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சமீபத்திய நிகழ்வுகளின் படி, பிக்பாஸ் இந்த விதிமீறல்களுக்காக வீட்டில் உள்ள பால், முட்டை, அசைவ உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரத்து செய்து சக போட்டியாளர்கள் அனைவருக்கும் கூட்டுத் தண்டனை வழங்கினார். இதனால் மற்ற போட்டியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வார இறுதியில் வரும் எபிசோடுகளில், நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி மற்ற போட்டியாளர்களின் சிறுசிறு தவறுகளையும், கேலிக் கூத்துகளையும் செய்து பேசுவது வழக்கம். ஆனால், பார்வதி - கம்ருதீன் விவகாரத்தில், குறிப்பாக மைக் மறைத்து பேசும் விவகாரம் மற்றும் அதனால் மற்ற போட்டியாளர்கள் தண்டிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து இதுவரை அவர் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை அல்லது கண்டிக்கவில்லை என்று பார்வையாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுகிறது.

"மற்ற போட்டியாளர்களை கடுமையாக விமர்சிக்கும் விஜய் சேதுபதி, ஏன் இந்த முக்கியமான விதிமீறலை கண்டுகொள்ளாமல் செல்கிறார்?" என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு இந்த அடல்ட் கன்டென்ட்டை மறைமுகமாக ஊக்குவிக்கிறதா அல்லது இது ஒரு டி.ஆர்.பி தந்திரமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சக போட்டியாளர்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட்ட பிறகும், தங்கள் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என்று பார்வதியும், கம்ருதீனும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், வி.ஜே.பார்வதி மீண்டும் ஒரு விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கார்டன் ஏரியாவில்  கம்ருதீனும் பார்வதியும் பேசிக் கொண்டிருக்கும் போது, பார்வதி தன் குரல் கேட்காதவாறு வாயை மட்டும் அசைத்து கம்ருதீனிடம் ஏதோ ரகசியமான விஷயங்களைப் பேசுகிறார். இது பிக்பாஸ் விதிமுறைகளை வெளிப்படையாக மீறும் செயலாகும். மைக் இல்லாததைப் போல வாயை மட்டும் அசைத்துப் பேசுவது, நிகழ்ச்சியின் ஒளிபரப்புக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படுகிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த தொடர் விதிமீறல்களுக்குப் பின்னரும் பார்வதிக்குத் தக்க தண்டனை கொடுக்கப்படாதது ஏன், இந்த வாரமாவது தொகுப்பாளர் விஜய் சேதுபதி இதைப் பற்றி கேள்வி எழுப்புவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த விவகாரம் நிகழ்ச்சிக்கு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளதுடன், சமூக ஊடக விவாதங்களின் மையப் புள்ளியாக மாறியுள்ளது.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.