ரெட் கார்டு கொடுத்தும் மாஸ் என்ட்ரி கொடுத்த பார்வதி.. மேடையிலேயே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
பிக் பாஸ் சீசன் 9 கிராண்ட் ஃபினாலேவில் எதிர்பாராத திருப்பமாக ரெட் கார்டு பெற்று வெளியேறிய விஜே பார்வதி கலந்து கொண்டார். சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டு அவர் பேசிய உருக்கமான பேச்சும், விஜய் சேதுபதியின் பாராட்டும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது விஜே பார்வதியின் வருகை தான். இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த பார்வதி, இடையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் 'ரெட் கார்டு' பெற்று பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
பொதுவாக ரெட் கார்டு பெற்று வெளியேறுபவர்கள் இறுதிப்போட்டிக்கு அழைக்கப்படமாட்டார்கள் என்ற ஒரு பிம்பம் இருந்த நிலையில், இந்த முறை விதிகளை உடைத்து பார்வதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கம்ருதீன் மேடைக்கு வந்தபோது, தொகுப்பாளர் விஜய் சேதுபதி அவரிடம் மனம் திறந்து பேசினார். கம்ருதீன் சிறப்பாக விளையாடியதாகவும், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது தனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தத்தை அளித்ததாகவும் கூறினார். அதே சமயம், பார்வதிக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு சில முக்கியமான வேலைகள் இருந்ததால் வர இயலவில்லை என்றும் விஜய் சேதுபதி அறிவித்தார். இதனால் பார்வதியின் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.
இருப்பினும், கிளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரங்கமே அதிரும் வண்ணம் பார்வதி மாஸாக என்ட்ரி கொடுத்தார். அவர் மேடைக்கு வந்ததும் அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பினர். தன் மீதான விமர்சனங்களை எல்லாம் கடந்து, மக்கள் காட்டும் இந்த அன்பைக் கண்டு பார்வதி நெகிழ்ந்து போனார். பிக் பாஸ் பயணத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேடையில் பேசிய பார்வதி, மிக முக்கியமான ஒரு விஷயத்தை முன்வைத்தார். "நான் இந்த வீட்டை விட்டு வெளியேறிய தருணத்தில், சக போட்டியாளரான சாண்ட்ராவிடம் சரியாகப் பேசவில்லை. முதலில் அதற்காக சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்றார். தான் வெளியேறிய போது மற்றவர்களைப் பற்றி யோசிக்க முடியாத அளவிற்கு, தான் நேசித்த அந்த வீட்டை விட்டுப் பிரிகிறோம் என்ற வேதனை தன்னை ஆட்கொண்டிருந்ததாக அவர் விளக்கமளித்தார். பார்வதியின் இந்த நேர்மையான மன்னிப்பு அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
மேலும் அவர் பேசுகையில், "இந்த பிக் பாஸ் வீடு எனக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. மகிழ்ச்சி, கொண்டாட்டம், கண்ணீர், காதல் என நவரசங்களையும் நான் இங்கே அனுபவித்தேன். மக்கள் கொடுத்த ஆதரவு தான் என்னை இன்று இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது," என உருக்கமாகக் கூறினார். பார்வதியின் பேச்சைக் கேட்டு மேடைக்கு வந்த சாண்ட்ரா, அவரை ஆரத் தழுவிக்கொண்டார். பழைய கசப்புகளை மறந்து இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்ட அந்தத் தருணம், இந்த சீசனின் ஆகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக மாறியது.
இதைப்பார்த்து நெகிழ்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, "இதுதான் பிக் பாஸ் கற்றுக்கொடுக்கும் பாடம். கடந்த கால கசப்புகளை மறந்து முன்னோக்கி செல்வது தான் வாழ்க்கை," என இருவரையும் மனதாரப் பாராட்டினார். ரெட் கார்டு பெற்று வெளியேறிய ஒரு போட்டியாளர், இவ்வளவு கண்ணியத்துடனும் நேர்மறையுடனும் இறுதிப்போட்டியில் பங்கேற்றது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்வதியின் இந்த அணுகுமுறை அவருக்கு மீண்டும் ஒரு பாசிட்டிவ் இமேஜை பெற்றுத் தந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
