டிஆர்பி வேட்டையில் இறங்கும் முன்னணி சேனல்கள்.. பொங்கல் 2026 படங்கள்!
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என தமிழ் சின்னத்திரையின் ஜித்தர்கள் இந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு டிஆர்பி (TRP) ரேஸில் மோதுவதற்கு தயாராகிவிட்டனர். கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி, சூர்யா, தனுஷ் ஆகியோரின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் மற்றும் சமீபத்திய வெளியீடுகள் என ஒரு பெரிய பட்டியலே தயாராக உள்ளது.
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் நேயர்களை கவர முன்னணி நடிகர்களின் படங்களை ஒளிபரப்ப உள்ளன. ‘கோட்’, ‘பைசன்’, ‘ரெட்ரோ’ என புதிய மற்றும் கிளாசிக் ஹிட் படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
விஜய் டிவி இந்த முறை வழக்கமான கமர்ஷியல் படங்களைத் தாண்டி, கதைக்களத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைக் கையில் எடுத்துள்ளது. ஜனவரி 15 பொங்கல் அன்று, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ‘பைசன்’ (Bison) திரைப்படம் ஒளிபரப்பாகிறது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தப் படம் இளைஞர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் ஹரிஷ் கல்யாணின் அதிரடி ஆக்ஷன் படமான ‘டீசல்’ ஒளிபரப்பப்படுகிறது.
ஜனவரி 16 அன்று குடும்பங்கள் கொண்டாடும் விதமாக சிம்ரன் மற்றும் சசிகுமார் இணைந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ காலை வேளையிலும், மாலையில் விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான ‘சக்தி திருமகன்’ திரைப்படமும் வெளியாகிறது. மேலும், ஜனவரி 17 அன்று அதர்வா நடிப்பில் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக உருவான ‘DNA’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
சன் டிவி எப்போதும் போல தனது பிரம்மாண்டமான லைன்-அப் மூலம் டிஆர்பி கோட்டையைத் தக்கவைக்க முயல்கிறது. பொங்கல் அன்று (ஜனவரி 15) காலையில் தனுஷின் ஆல்-டைம் பேவரைட்டான ‘திருச்சிற்றம்பலம்’ ஒளிபரப்பாகிறது. மாலை நேரத்தில் சூர்யாவின் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவான ‘ரெட்ரோ’ (Retro) திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.
தொடர்ந்து விடுமுறை நாட்களான ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், குடும்ப ரசிகர்களை கவரும் நோக்கில் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ மற்றும் அஜித்தின் மெகா ஹிட் படமான ‘விசுவாசம்’ ஆகிய படங்கள் மீண்டும் களம் இறக்கப்படுகின்றன. இந்த படங்கள் ஏற்கனவே பலமுறை ஒளிபரப்பப்பட்டாலும், பண்டிகை காலங்களில் அதிக டிஆர்பி பெற்றுத் தருவதில் இவை கில்லாடிகள்.
இந்த பொங்கல் ரேசில் ஜீ தமிழ் சேனல் தான் மற்றவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. ஜனவரி 15 அன்று சூரியின் எதார்த்தமான நடிப்பில் ஹிட் அடித்த ‘மாமன்’, மற்றும் சிவகார்த்திகேயனின் கலகலப்பான ‘மதராசி’ ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. கூடவே சமீபத்தில் ஓடிடி மற்றும் தியேட்டரில் கவனத்தைப் பெற்ற ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படமும் இடம்பெறுகிறது.
ஆனால், ஜீ தமிழின் துருப்புச் சீட்டு ஜனவரி 16 அன்றுதான் வெளியாகிறது. அன்று மாலை தளபதி விஜய்யின் மெகா பிளாக்பஸ்டர் படமான ‘தி கோட்’ (The GOAT) ஒளிபரப்பாகிறது. இதனுடன் ரிஷப் ஷெட்டியின் உலகப்புகழ் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு வெளியாகும் அவரது படங்களின் சேட்டிலைட் ஒளிபரப்பு என்பதால், இதன் டிஆர்பி எகிறும் என கணிக்கப்படுகிறது.
பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் மோதும்போது சன் டிவி மற்றும் ஜீ தமிழ் இடையே கடும் போட்டி இருக்கும். இம்முறை சூர்யாவின் 'ரெட்ரோ' மற்றும் விஜய்யின் 'கோட்' ஆகிய இரு படங்களும் டிஆர்பி-யில் புதிய சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், விஜய் டிவியின் புதிய வெளியீடுகளான 'பைசன்' மற்றும் 'DNA' ஆகியவை இளைஞர்களின் ஆதரவை அதிகம் பெறும்.
பண்டிகை நாட்களில் இல்லத்தரசிகளின் விருப்பம் ஒரு பக்கமும், இளைஞர்களின் ஆர்வம் மறுபக்கமும் இருப்பதால், இந்த 'பொங்கல் ரேஸ்' சின்னத்திரையில் ஒரு மினி யுத்தமாகவே மாறப்போகிறது.
