கிளைமாக்ஸிலும் எடுபடாத பிக் பாஸ் 9! சீரியல்களிடம் தோற்றுப்போன ரியாலிட்டி ஷோ
விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் தற்போதைய டிஆர்பி (TRP) ரேட்டிங் மற்றும் மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் வரவேற்பு குறித்த விரிவான அலசல்.
தமிழ் சின்னத்திரையில் எப்போதும் ஒரு படி முன்னால் இருக்கும் விஜய் டிவி, தற்போது புதிய மற்றும் பழைய சீரியல்களின் கலவையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. சீரியல் என்றாலே அழுகை, சதி என்ற பிம்பத்தை மாற்றி, யதார்த்தமான கதைகளுக்கும் கலகலப்பான ரியாலிட்டி ஷோக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதே இவர்களின் வெற்றி ரகசியம். தற்போது வெளியாகியுள்ள டிஆர்பி தரவரிசையில் எந்தெந்த இடங்கள் எதைப் பிடித்துள்ளன என்று விரிவாகப் பார்ப்போம்.
சின்ன மருமகள்
சமீபத்தில் தொடங்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல், ஒரு முற்போக்கான கருத்தை மையமாக வைத்து நகர்கிறது. படிக்க விரும்பும் ஒரு பெண், புகுந்த வீட்டில் சந்திக்கும் சவால்களை மையமாக கொண்ட இந்தத் தொடர், தற்போது 6.9 ரேட்டிங் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சற்று மெதுவாகத் தொடங்கினாலும், தற்போதைய எபிசோட்களில் மாமியார்-மருமகள் இடையேயான ஈகோ மோதல்கள் சூடுபிடித்துள்ளதால், வரும் வாரங்களில் இதன் ரேட்டிங் உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நகரப்புற இல்லத்தரசிகள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிக் பாஸ் சீசன் 9
தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ், தற்போது 9-வது சீசனில் அடி எடுத்து வைத்தது. பொதுவாக பிக் பாஸ் ஆரம்ப வாரங்களில் 10-க்கும் மேல் ரேட்டிங் வாங்கும். ஆனால், தற்போது 7.6 ரேட்டிங் பெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி எபிசோடுகள் இந்த வாரம் இடம்பெற்றாலும் மிகக் குறைந்த ரேட்டிங் பெற்று இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
முதல் சீசனின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தந்தையின் அதிகாரம் மற்றும் மகன்களின் பாசத்தை மையமாக வைத்து விறுவிறுப்பாக நகர்கிறது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழும் மகன்கள் என கதைக்களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் 9.5 ரேட்டிங் பெற்று அசத்தி வருகிறது. பழைய சீசனின் சாயல் இருந்தாலும், புதிய கதாபாத்திரங்களின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஒரு கூட்டு குடும்பத்தின் மாண்பை இக்காலத்திற்கு ஏற்பச் சொல்வதே இதன் பலம்.
அய்யனார் துணை
விஜய் டிவியின் புதிய முயற்சியான 'அய்யனார் துணை' குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. கடவுள் நம்பிக்கை மற்றும் ஊர் மக்களின் கலாச்சாரம் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் தமிழ் மக்களிடம் தனி மவுசு உண்டு. அந்த வகையில், இந்தத் தொடர் 10 ரேட்டிங் பெற்று டாப் 2 இடத்தைப் பிடித்துள்ளது. கிராமத்து பின்னணி, அழகான காட்சியமைப்புகள் மற்றும் எதார்த்தமான வசனங்கள் இந்தத் தொடரை குறுகிய காலத்தில் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
சிறகடிக்க ஆசை
கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவியின் டாப் 1 சீரியலாக 'சிறகடிக்க ஆசை' மகுடம் சூடி நிற்கிறது. முத்து-மீனா ஜோடியின் எதார்த்தமான காதல் மற்றும் மாமியார் விஜயாவின் வில்லத்தனம் கலந்த நகைச்சுவை தான் இந்தத் தொடரின் வெற்றிக்கு முக்கியக் காரணம். தற்போது 11.2 ரேட்டிங் பெற்றுள்ள இந்தத் தொடர், மற்ற அனைத்து சேனல் சீரியல்களுக்கும் கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது. எந்தவிதமான செயற்கையான திருப்பங்களும் இல்லாமல், ஒரு சராசரி நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை அழகாகக் காட்சிப்படுத்துவதால், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
