1. Home
  2. தொலைக்காட்சி

2025ல் மூடுவிழா கண்ட டாப் சீரியல்கள்.. முழு லிஸ்ட்!

baakiyalakshmi

2025ம் ஆண்டு தமிழ் சின்னத்திரை வரலாற்றில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என முன்னணி சேனல்களில் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த சூப்பர் ஹிட் சீரியல்கள் முதல், சமீபத்தில் தொடங்கப்பட்ட தொடர்கள் வரை பலவும் இந்த ஆண்டு முடிவுக்கு வந்துள்ளன.


தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு 2025-ம் ஆண்டு ஒரு கலவையான ஆண்டாகவே அமைந்தது. டிஆர்பி (TRP) ரேட்டிங்கில் டாப் இடத்தில் இருந்த சீரியல்கள் திடீரென முடிவுக்கு வந்ததும், புதிய சீரியல்களின் வருகையும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, பல ஆண்டுகளாக இல்லத்தரசிகளின் ஃபேவரைட்டாக இருந்த 'பாக்கியலட்சுமி' போன்ற தொடர்கள் முடிவடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சன் டிவியின் அதிரடி மாற்றங்கள்

மெகா தொடர்களின் கோட்டையான சன் டிவியில் இந்த ஆண்டு சில முக்கிய தொடர்கள் விடைபெற்றன. பெரும் எதிர்பார்ப்புடன், நட்பை மையமாக வைத்து தொடங்கப்பட்ட 'ரஞ்சனி' சீரியல், எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் வெறும் 151 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது. அதேபோல், 2024-ல் தொடங்கப்பட்ட 'புன்னகை பூவே' தொடர் 9 மாதங்கள் மட்டுமே நீடித்து 319 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது. மேலும், ஒரு பெண்ணின் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக விவரித்த 'செவ்வந்தி' சீரியல் மூன்று ஆண்டுகால பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த ஜூன் மாதம் விடைபெற்றது.

விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியல்கள் முடிவு

விஜய் டிவியில் இந்த ஆண்டின் மிகப்பெரிய அதிர்ச்சி 'பாக்கியலட்சுமி' சீரியலின் முடிவுதான். சுமார் ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி, 1469 எபிசோடுகளைக் கடந்த இந்தத் தொடர், ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. ஒரு இல்லத்தரசியின் முன்னேற்றத்தைச் சொல்லிய விதம் பலருக்கும் உத்வேகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, காதல் கதையம்சம் கொண்ட 'நீ நான் காதல்' (384 எபிசோடுகள்), குடும்பப் பாசத்தைப் போற்றிய 'ஆஹா கல்யாணம்' (600 எபிசோடுகள்) மற்றும் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் நடித்த 'தங்கமகள்' (477 எபிசோடுகள்) ஆகியவையும் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தன.

ஜீ தமிழில் சீரியல்களின் அணிவகுப்பு

2025-ல் மற்ற சேனல்களை விட அதிகப்படியான சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ஜீ தமிழையே சேரும். டிஆர்பி-யில் முன்னணியில் இருந்த மாரி, நினைத்தாலே இனிக்கும் மற்றும் நினைத்தேன் வந்தாய் போன்ற தொடர்கள் ஒரே ஆண்டில் முடிவடைந்தன. இவை தவிர, மௌனம் பேசியதே, வள்ளியின் வேலன், ராமன் தேடிய சீதை, மனசெல்லாம், இதயம் போன்ற தொடர்களும் இந்த ஆண்டோடு தங்களது பயணத்தை நிறுத்திக்கொண்டன. புதிய கதைகளுக்காக பழைய தொடர்களை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் சேனல் தரப்புக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கலைஞர் டிவியின் ஷாக் முடிவு

எதிர்பாராத விதமாக தொடங்கப்பட்ட வேகத்திலேயே முடிவுக்கு வந்த சீரியல் என்றால் அது கலைஞர் டிவியில் ஒளிபரப்பான 'மீனாட்சி சுந்தரம்' தான். மூத்த நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் ஷோபனா நடிப்பில் உருவான இந்தத் தொடர், ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறாததால் அதன் 100-வது எபிசோடிலேயே அதிரடியாக நிறுத்தப்பட்டது.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.