தல அஜித் பெரும்பாலும் தன்னுடைய படத்தின் டெக்னீஷியன்கள் விஷயத்தில் தலையிட மாட்டார் என்பது பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த முறை அஜித் அந்தக் கொள்கையை மாற்றியுள்ளதாக தெரிகிறது.
கடைசியாக தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானதற்குப் பிறகு கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகியும் அஜித்தின் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை.
இதனால் தல ரசிகர்கள் வெறிகொண்டு கொண்டாட காத்திருக்கும் திரைப்படம்தான் வலிமை. வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் இரண்டாவது முறையாக இந்தப் படம் உருவாகி வந்தது. மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் வேற மாதிரி என்ற சிங்கிள் பாடல் அனைத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் உருவாக உள்ளது. ஆனால் இந்த முறை அதில் ஒரு மாற்றம்.
முன்னதாக வினோத் அஜித் கூட்டணியில் உருவாகி வந்த படங்களுக்கு இசை அமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றி வந்தார். கடந்த சில வருடங்களாகவே அஜித்தின் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாதான் பிரதான இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
ஆனால் இந்த முறை யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான் தல 61க்கு இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். சமீபத்தில் அஜீத்தை சந்தித்த ஜிப்ரானிடம் விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என்று தல வாக்கு கொடுத்ததாக ஜிப்ரான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட செய்தி இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. ஜிப்ரானின் பாடல்களை விட பின்னணி இசைக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.