தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் பல மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய். அதனைத் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ள விஜய் தற்போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தலைவி என்ற புதிய படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தலைவி படம் நேற்று வெளியானது. ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் காட்சியை திரையரங்கில் பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் படம் குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் துணிவுடன் சாதித்துக் காட்டுகிறார் என்பதை தலைவி படம் காட்டுகிறது. அது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் படத்தின் ஒரு இடத்தில் எம்.ஜி.ஆர் பதவிக்கு ஆசைப்பட்டது போல காட்சி வருகிறது.
எம்.ஜி.ஆர் என்றைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. அப்படி வரும் படத்தின் காட்சி உண்மையல்ல. அதை நீக்க வேண்டும். அதேபோல பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டத்தில் சில குறைகள் இருப்பதாக காட்சிகள் உள்ளது.
மேலும், ஜெயலலிதா எம்.ஜி.ஆரை அவமதிப்பது போலவும் ஒரு காட்சி உள்ளது. இவை அனைத்தையும் இயக்குனர் நீக்க வேண்டும். நடக்காத சம்பவங்களைப் படத்தில் வைத்திருக்கக் கூடாது” என கூறியுள்ளார்.
இதுதவிர தி.மு.க எங்களுக்கும் எங்கள் தலைவிக்கும் கொடுத்த தொல்லைகளை படத்தில் சொல்லப்படவே இல்லை. வரலாறு என்று வரும்போது அதையும் சொல்லியிருக்க வேண்டும். இவை எல்லாம் சொல்ல மறந்த கதைகள் என நாசுக்காக திமுக வையும் கலாய்க்க ஜெயக்குமார் மறக்கவில்லை.