Thalapathy Vijay: நடிகர் விஜய்யின் வாழ்க்கையில் இன்று ஒரு முக்கியமான நாள் என்று தான் சொல்ல வேண்டும். என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு என்று விஜய் சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த ரசிகர்களுக்காக விஜய் இன்று இரண்டு பெரிய விஷயங்களை செய்திருக்கிறார்.
கன்னியாகுமரியில் அதிகாலையில் முக்கடல் சந்திக்கும் இடத்தில் நிலவு மறைந்து சூரியன் எழுவதை பார்ப்பதற்கே க கோடி ஜனம் கூடியிருக்கும். அப்படி ஒரு நாள் தான் இன்று விஜய் ரசிகர்களுக்கு. கிட்டத்தட்ட சினிமாவில் விஜயின் அஸ்தமனமும், அரசியலில் விஜயின் உதயமும் என்று கூட இதை சொல்லலாம்.
மக்களுக்காக சேவை செய்ய வருகிறேன், எனது தரப்பில் இருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுகிறேன். எட்டு மாதங்களுக்கு முன்பு விஜய் சொன்ன விஷயம் இது.
மக்களுக்காக விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து சந்தோஷப்படுவதா, இல்லை இனி தளபதியை திரையில் பார்க்க முடியாது என வருத்தப்படுவதா என்று தெரியாமல் இருதலை கொள்ளியாக விஜய் ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தளபதியின் முதலும், முடிவும்
தளபதி 69 அப்டேட் வரும் பொழுதே ஒன் லாஸ்ட் டைம் என்ற வார்த்தையை பார்த்ததும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே இதயம் கனத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். விஜய்யை திரையில் பார்த்து ரசித்த நமக்கே இப்படி இருக்கிறது என்றால், விஜய் இன்னைக்கு எப்படி ஒரு மனநிலையில் இருந்திருப்பார் என யூகிக்க முடிகிறது.
தன் அப்பாவிடம் சினிமா தான் எனக்கு வேண்டும் என அடம் பிடித்து ஆசையாக உள்ளே நுழைந்தார். சினிமாவும் விஜய்யை அவ்வளவு எளிதாக வாரி தழுவி கொள்ளவில்லை. பல இடங்களில் அவமானப்பட்டு தான் விஜய் ஒரு ஹீரோவாக அங்கீகாரம் பெற்றார்.
பூவே உனக்காக படம் தான் விஜய் என்னும் நடிகனை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்த்தது. காதல் நாயகன், ஆக்ஷன் ஹீரோ, நடன சூறாவளி, காமெடியில் மன்னன் என விஜய் பல முகங்களை நமக்கு காட்டிவிட்டார். ஒரு காலகட்டத்தின் போது விஜய் நடிக்கும் படங்கள் எங்களுக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்து இருக்கிறது, அவருக்கு ரெட் கார்டு கொடுங்கள் என ஒரு சாரார் முண்டியடித்துக் கொண்டு வந்ததை யாராலும் மறக்க முடியாது.
அதிலிருந்து பீனிக்ஸ் பறவை போல் எழுந்து, இன்று பாக்ஸ் ஆபிஸின் கிங்மேக்கர் ஆக இருக்கிறார். விஜய வச்சு படம் எடுத்தா கை மேல லாபம் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு கால் சீட்டுக்காக தவம் கிடக்கிறார்கள். விஜய் இன்னும் 20 வருஷத்திற்கு நம்பர் ஒன் நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வரலாம்.
ஆனால் தன்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்காக அரசியல் களம் காண வேண்டுமென விஜய் முடிவெடுத்தார். ரொம்பவும் கூச்ச சுபாவம், அவ்வளவு எளிதில் சிரித்து கூட விடமாட்டார், பேசுவது அரிதிலும் அரிது.
அப்படிப்பட்ட விஜய் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பேசிய விஷயங்கள் மெய்சிலிர்க்கும் விதமாக அமைந்தது. தற்போது அரசியல் மேடை ஏறப் போகிறார். இன்று ஒரே நாளில் தளபதி 69 படத்தின் பட பூஜை, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா.
விஜய் சினிமாவை விட்டு விலக நினைத்திருக்கும் வேளையில், நினைத்திருந்தால் இனி தன்னை வாழ வைக்க போகும் அரசியல் மேடை நிகழ்வில் கலந்து கொண்டிருக்கலாம். ஆனால் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு கடைசி மரியாதை கொடுக்க வேண்டும் என்று விஜய் இன்று தளபதி 69 பட பூஜையில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு விஜய்க்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் உணர்வு பூர்வமான நிகழ்வாக அமைந்திருக்கிறது.