புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதி66 – அனல் பறக்க போகும் அரசியல் வசனங்கள்.. தரமான பிரபலத்தை களமிறக்கும் விஜய்

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் குக்கூ. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குநர் ராஜூமுருகன்.

அதன்பின் அவர் சில வருடங்களுக்குப் பிறகு ஜோக்கர் என்ற அற்புதமான திரைப்படத்தை இயக்கி பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றார். இந்த திரைப்படம் தேசிய அளவில் பல விருதுகளை வாங்கிக் குவித்தது. அதன் பிறகு ஜிப்ஸி என்ற திரைப்படத்தை இயக்கிய இவர் மெஹந்தி சர்க்கஸ், தோழா உள்ளிட்ட படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

தற்போது இவர் விஜய்யின் நடிப்பில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்திற்கு வசனம் எழுத இருக்கிறார். சமீபகாலமாக விஜய்யின் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு சமூக கருத்தை மையப்படுத்தி வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது உருவாக இருக்கும் தளபதி 66 திரைப்படமும் அதே பாணியில் உருவாக இருக்கிறது. இதற்காக ரசிகர்களை கவரும் வகையில் வசனங்களை எழுத ராஜுமுருகன் தயாராகியுள்ளார். இவரின் ஜோக்கர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது படத்தில் இடம்பெற்ற வசனங்கள் தான்.

அதேபோன்று தளபதி 66 திரைப்படத்திலும் வசனங்கள் அனைத்தும் அனல் பறக்க தயாராகி வருகிறது. மேலும் அரசியல் சம்பந்தப்பட்ட பஞ்ச் வசனங்களும், சமூக அவலங்களை மையப்படுத்தி பேசும் வசனங்களும் இந்த திரைப்படத்தில் அதிகமாக இருக்கிறதாம்.

இதனால் நிச்சயம் ராஜூ முருகனின் வசனங்கள் மிக பெரிய அளவில் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து ராஜூமுருகன், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News