சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

OTT-யால் வந்த சாபக்கேடு.. மக்களால் பாராட்டப்படாத விட்னஸ் ஒரு தரமான விமர்சனம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலை வரும் பொழுது, ஏன் அனைத்து சாதியினரும் மலம் அள்ளும் அவல நிலையை தங்களது உரிமை, என கருதக்கூடாது? இங்கு சாதிய வன்மம், நம் சமூகத்தின் நரம்பிலும், மூளையிலும், ஓடும் இரத்தத்திற்கு பதிலாக சாதிய நியதி எனும் சாக்கடை ஆறாக ஓடுகிறது. நம் அனைவரது மனநிலையிலும் காரிய காரணமின்றி சாதியே தேசியம் என்ற ஒரு தத்துவத்தை பதியவைக்க முயற்சி எப்பொழுதுமே நடந்து கொண்டிருக்கிறது!.

நம் சமூகத்தின் அனைத்து படி நிலைகளிலும் சாதி தீண்டாமை இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அல்லும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதை மிக நுட்பமாக தனக்கு கிடைத்த ஆகப்பெரும் ஒரு திரைப்பட மொழி மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு படிப்பினை கொடுத்திருக்கும் விட்னஸ் படத்தின் இயக்குனர் திரு.தீபக் அவர்களுக்கு நன்றிகள். அசுரன், ஜெய் பீம், போன்ற படங்களின் வரிசையில் இந்த திரைப்படம் நமக்கு ஒரு படிப்பினை கற்றுக்கொடுக்கும் என்ற கருத்திற்கு யாருக்கும் மாற்று சிந்தனை இருக்கப்போவதில்லை.

படத்தின் ஆரம்பம் முதலே ரமேஷ் தமிழ் மணியின் இசை படத்தின் தன்மையை மிகத் துல்லியமாக நமக்கு புரிய வைத்து விடுகிறது. மிக நேர்த்தியான பல விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அழுத்தமான மற்றும் கூர்மையான வசனங்களும் நேர்த்தியான நடிப்பும் மிக அழுத்தமான கருத்துகளை கூட எளிதாக மக்கள் மனதில் பதிய வைக்க இயக்குனர் தவறவில்லை. உதாரணமாக அடையாறு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்கள் எல்லாம் மேன்மை மிகுந்தவர்களும் அல்ல, செம்மஞ்சேரி மாதிரியான பகுதிகளில் இருப்பவர்கள் மோசமானவர்களும் அல்ல.

Also read: மனிதனே மனிதனை அசிங்கப்படுத்தும் உலகம் இது.. சாதிகள் உள்ளதடி பாப்பா விட்னெஸ் விமர்சனம்

இது மாதிரியான வசனங்களும் துப்புரவுத் தொழிலாளர்களின் அவல நிலையை அதிலுள்ள சாதியக்கொடுமைகளையும் தனித்துவமாக பிரித்து மேய்ந்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள். சாதிய தீண்டாமைக்கு எதிரான படங்கள் வரிசையில் மற்றும் ஒரு தரமான படைப்பு என்பதை அனைவரும் அறிவர். மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலநிலை இன்னும் இச்சமூகத்தில் தொடர மிக முக்கிய காரணம் இச்சமூகத்தின் அலட்சியமே!

ஒரு தனிமனித இழப்பாக பார்க்காமல் ஒரு சமூகத்தின் இழப்பாக என்ற கருத்தை மிக நேர்த்தியாக பார்ப்பவர்களுக்கு அந்த வழியை கடத்திய விதம் மிக அழகு. சில வசனங்கள் மூலம் துப்புரவுத் தொழிலாளர்களின் அவல நிலையை, அதிலுள்ள சாதியக் கொடுமையையும் தனித்தனியாக பிரித்து மேய்ந்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

இப்பேர்ப்பட்ட தனித்துவமான சில படங்கள் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தார் போல் வருகின்றது. இதற்குண்டான வரவேற்பு இங்கு உண்டாஎனில் நிச்சயமாக உண்டு. ஆனால் அனைத்து மக்களையும் சென்றடைந்ததா என்றால் “அது மிகப் பெரிய கேள்விக் குறியே”. இதே திரைப்படம் ஒருவேளை நேரடி திரைப்பட வெளியீடாக வந்து இருக்கும் பட்சத்தில் இது அனைத்து மக்களையும் மிக எளிதாக சென்றடைந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இங்கு அதிகப்படியான OTT தளங்கள் ஊடுருவிகிடைப்பதனால் இது போன்ற நல்ல படங்களும் மக்களின் கண்ணிமைக்கும் பொழுதில் மழையின் துளியுமாய் காணாமல் போய்விடுகின்றது.

இதையெல்லாம் எண்ணும்பொழுது துப்புறவு பணியாளர்களை பற்றி “நீலம்” சார்பில் நடத்தப்பட்ட ஒரு நாடகம், அதில் நடிகர் சத்யராஜ் அவர்கள் பேசிய சில வார்த்தைகள் மட்டுமே என்னுள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதில் அவர் கூறியது “நம்மில் பலரும் உடல் ரீதியான பல பரிசோதனைகளை செய்ய பரிசோதனை ஆய்வகத்திற்கு பலமுறை சென்று இருக்கிறோம், அப்போது நம்முடைய மலம் மாதிரியை ஆய்வகத்தின் நிர்வாகிக்கு கொடுக்கும்பொழுது நமக்கு உருவாகும் நெருடல், நம் மலத்தினை மற்றவர்கள் அள்ளும் பொழுது அவர்களின் வலியை எண்ணும் பொழுது மனதை கனத்துப் போக செய்கின்றது”.

Also read: உதவி செய்வதில் விஜயகாந்தையே மிஞ்சிய நடிகர்.. நாட்டை விட்டுப் போனாலும் வாரி கொடுக்கும் வள்ளல்

இதில் ஆகப்பெரிய ஒரு காரியம் விடுபடும் எனில், அதுவும் அரசியலே. உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் ஒரு சில பொக்கிஷங்கள் சேரவேண்டியவர்களுக்கு சேர்ந்தே தீரும். அதுபோல் மக்களுக்கு சேரவேண்டிய ஆழமான கருத்துக்கள் கூடிய இது மாதிரியான திரைப்படங்களை நம் சுற்றத்தாருக்கு பகிர்வது மிக அவசியம்.

நமக்கு உண்டான பாதையை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும். இங்கு இந்த கணினி உலகத்தில் நான் எதைப் பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது என்பதனை தீர்மானிக்க என் பின்னே பல சக்திகள் ஊடுருவி உள்ளது. எனில், அதை தீர்மானிக்கும் பொருட்டு OTT தலங்கள் முடிவெடுக்கிறது. இதுவும் ஒரு வகையான அரசியல். இங்கு அரசியலும், சினிமாவாக பார்க்கப்படுகிறது. சினிமாவும் அரசியலாக பார்க்கப்படுகிறது. மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட இப்படத்தினை நாம் இன்றி எவர் மக்களிடம் சேர்ப்பார் பராபரமே!

Also read: ஒரு வழியாக முதுகில் இருந்து இறங்கிய வேதாளம்.. அடுத்த படத்திற்கு நடிப்பு ராட்சசனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வினோத்

Trending News