வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாக்யராஜ் செய்த மிகப்பெரிய சாதனை.. 40 ஆண்டு காலமாக யாராலும் முறியடிக்கவில்லை

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கே பாக்கியராஜ். இவர் பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றினார். இப்படத்தில் ஒரு சிறு வேடத்திலும் நடித்திருந்தார். அதன் பிறகு புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து சுவரில்லாத சித்திரம் படத்தின் மூலம் இயக்குனராகவும் கால் பதித்தார். இந்நிலையில் பாக்யராஜ் நிகழ்த்திய சாதனையை தற்போது வரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை. அதாவது ஒரு ஹீரோ வருடத்திற்கு ஒரு படம் கொடுப்பதற்கே நாக்கு தள்ளிவிடுகிறது.

ஆனால் பாக்யராஜ் தனது இயக்கத்திலேயே ஒரு வருடத்திற்கு ஹீரோவாக நடித்த நான்கு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அவ்வாறு பாக்யராஜுக்கு பொற்காலமாக அமைந்தது ஆண்டு தான் 1981. அந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மௌன கீதங்கள்.

பாக்யராஜ், சரிதா நடிப்பில் வெளியான இப்படம் அந்த ஆண்டு சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது வெளியான படம் இன்று போய் நாளை வா. பாக்யராஜ் திரைக்கதையில் உருவான இப்படத்தில் பாக்யராஜ், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தை தொடர்ந்து இதே ஆண்டு வெளியான படம் விடியும் வரை காத்திரு. கிரைம் த்ரில்லர் கதையில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

அதே ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அந்த 7 நாட்கள். இப்படத்தில் இடம்பெறும் வசனங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படமும் மெகா ஹிட் வெற்றி பெற்றது. தான் இயக்கி, எழுதி, நடித்த 4 படமும் ஒரே ஆண்டில் வெற்றிபெற்ற பெருமை பாக்யராஜை மட்டுமே சேரும்.

Trending News