மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தன் திறமையான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக உருவெடுத்தார்.
கோபி சாந்தா எனும் பெயரில் பிறந்து “ஆச்சி” என்று நம் அனைவராலும் அழைக்கப்பட்டவர் மனோரமா. ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார் பிறகு குணச்சித்திர வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார்.
மனோரமா இதுவரை 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாது இவர் நடனம், பாடல் போன்றவற்றிலும் வல்லவர். இவர் இதுவரை 300 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்ததால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். மேலும் பத்மஸ்ரீ, கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
இத்தனை பெருமைகளை படைத்த ஆச்சி ஒரு தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 1963 இல் வெளிவந்த கொஞ்சும் குமரி என்ற திரைப்படம் தான் அது. அதன்பிறகு மனோரமா நகைச்சுவை வேடங்களில் முக்கியத்துவம் கொடுத்து நடித்துவந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், சிங்களம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார். புதிய பாதை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
சிவாஜி, எம்ஜிஆர் என்று அன்றைய காலம் தொடங்கி இன்றைய காலம் வரை தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் ஆச்சி மனோரமா என்று சொன்னால் அது மிகையாகாது.