வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விக்ரமுக்கு வந்த திடீர் சிக்கல்.. பிளான் போட்டு காப்பாற்றிய பிரபலம்

மகான் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான ஶ்ரீநிதி ஷெட்டி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தி இயக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. படு மிரட்டலாக இருந்த அந்த டீஸர் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு திடீர் சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்திருந்த லலித் குமார் தயாரித்துள்ளார். அவர் தற்போது இந்த கோப்ரா திரைப்படத்தை வழக்கமாக விக்ரம் திரைப்படம் வியாபாரம் ஆகும் விலையை காட்டிலும் அதிக விலைக்கு பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த படத்தை வாங்குவதற்கு தற்போது வினியோகஸ்தர்கள் தயங்கி வருகிறார்களாம். இதனை கவனித்த லலித்குமார் தற்போது அவர்களிடம் ஒரு டீலில் இறங்கியிருக்கிறார். இந்த கோப்ரா திரைப்படத்தை வாங்கினால் அடுத்ததாக அவர் தயாரிக்கவிருக்கும் தளபதி 67 திரைப்படத்தையும் உங்களுக்கு தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

தற்போது விஜய், வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். லலித் குமார் தான் அந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது.

அந்த அடிப்படையில்தான் லலித் குமார் தற்போது இப்படி ஒரு வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார். ஆனால் விஜய் நடிக்கும் அந்த திரைப்படத்தை வாங்குவதற்கு கமல் மற்றும் உதயநிதியின் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதே போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. அப்படி இருக்கும்போது லலித்குமார் போட்டுள்ள இந்தத் திட்டம் எந்த வகையில் சாத்தியம் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Trending News