தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் திமுகவை சார்ந்தவர் ‘அதிமுகவை புறக்கணிக்கிறோம்’ என்ற பெயரில் கிராமசபை கூட்டங்களை கூட்டி வருகின்றனர். ஆனால் கூட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடாமல், தினசரி ஒரு பஞ்சாயத்தில் தான் ஈடுபட்டு வருகின்றனர் எதிர்கட்சியினர்.
ஏனென்றால், சமீபத்தில் கூட ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது திமுக ஒன்றிய செயலாளரின் பேச்சால் வன்னியர்கள் அனைவரும் கொந்தளித்து உள்ளனர். ஏனெனில் பெரம்பலூர் மாவட்ட ஆலந்தூர் ஒன்றிய திமுக செயலாளரும், கே என் நேருவின் மைத்துனரும் ஆன கிருஷ்ணமூர்த்தி, ‘வன்னியர் சமுதாயத்தில் இன்று படித்த இன்ஜினியர்கள் இருப்பதற்கு காரணம் கருணாநிதி போட்ட பிச்சைதான்’ என்று கூறியிருக்கிறார்.
இது வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்துவதாகவும், கேவலப்படுத்துவதாகவும் வன்னியர் சங்கங்கள் தெரிவித்து வருவதோடு, திமுகவின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல், திமுகவினர் இந்த பதிவிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை ‘சாதியை வைத்து அரசியல் செய்ய மாட்டோம்’, ‘மதச்சார்பின்மையை கடை பிடிப்போம்’ என்று கூறி வந்த திமுகவினர், தற்போது பிரச்சார களத்தில் இதுபோல சாதியின் பெயர்களைக் கூறி, அவர்களை இழிவுபடுத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.