ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

தேனி குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் பக்தர்கள் வெள்ளம்..

குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் திருக்கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையிலும், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

புகழ்பெற்ற திருக்கோயில் : தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருகிறார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது.

இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில் நடைபெறும். தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சாமியைத் தரிசனம் செய்வர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடக்க இருந்தது. இந்த சூழலில், கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஆடித் திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் தினசரி மூன்று வேளை பூஜை வழக்கம் போல் நடைபெறும் என்றும், இதில் பக்தர்கள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் குவிப்பு : பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஆடி முதல் நாள் என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். இதனால் போலீசார் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தொடர்ந்து போலீஸாரால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், பேரூராட்சி சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு வருகிறது. உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படுகிறது.

bhagavan
bhagavan
- Advertisement -spot_img

Trending News