நடிகர் சூர்யா மீது தமிழ் நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.
இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் தியாகராஜன் கைப்பற்றி உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கில் டப் செய்து ஞானவேல் ராஜா வெளியிட்டிருந்தார். இதை எதிர்த்து தியாகராஜனும், அவரது மனைவி சாந்தியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், “தானா சேர்ந்த கூட்டம். படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார். இது ஒப்பந்தத்திற்கு முரணானது. எனவே, இந்த படத்தை தெலுங்கில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய ஞானவேல்ராஜாவுக்கு முழு உரிமை உள்ளது. ரீமேக் வேறு டப்பிங் வேறு” என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 என்ற படத்தின் ரீமேக் தான் தமிழில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படமாக வெளியாகி உள்ளது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை தயாரிப்பாளர் தியாகராஜனிடம் இருந்தாலுமே டப்பிங் வேறு, ரீமேக் வேறு என்பதாலே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.