திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இவங்களால தான் சினிமா செத்துப்போச்சு! முன்னணி நடிகர்களை விளாசிய ராதாரவி

திரெளபதி படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் தான் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. தற்போது இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. திரெளபதி படம் காரணமாக இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ருத்ர தாண்டவம் படத்தில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிபின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். மொத்த வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் ராதாரவி, சினிமா செத்து போய்விட்டது. நடிப்பு திறமைக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. முன்னணி நடிகர்கள் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எதிராக அவர்களின் படங்களில் வசனம் பேசுகிறார்கள். ஆனால் அதே கார்ப்ரேட் நிறுவனங்களிடம் தான் அவர்களின் படத்தை விற்பனை செய்கிறார்கள் என கூறியுள்ளார்.Radharavi_Warning_Lawrence

பத்திரிகையாளர் சந்திப்பின் போது மூத்த நடிகர் இவ்வாறு பேசியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் டாப் ஹீரோக்கள் என கூறியுள்ளதால், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை தான் மறைமுகமாக சாடியுள்ளாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளியான திரெளபதி படம் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தது. இருப்பினும் படம் வெற்றி பெற்றது. அதே போல் ருத்ர தாண்டவம் படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளதால், படம் நிச்சயம் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News