நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
எளிதாக வெற்றி பெறக் கூடிய போட்டியை கோட்டைவிட்டது கொல்கத்தா அணி. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பியதால் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தாரை வார்த்தது.
நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆன்ட்ரே ரசல் மொத்தமாக சொதப்பினார். 2019 ஐபிஎல் தொடரில் ரசல் மிகப்பெரிய ஃபார்மில் இருந்தார். அதன்பின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரசல் சர்வதேச அளவில் லீக் போட்டிகள் அனைத்திலும் சொதப்பினார். மொத்தமாக பார்மை இழந்து கஷ்டப்பட்டார்.
கடந்த வருடமும் ஐபிஎல் போட்டியில் சரியாக ஆடவில்லை. இந்த நிலையில் இந்த வருடமாவது ரசல் பார்மிற்கு திரும்புவார் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் நம்பியது. ஆனால் நேற்றைய போட்டியில் அவர் பவுலர்களை சந்திக்க திணறினார், குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவின் பந்துகளை சந்திப்பதற்கு பயந்து நடுங்கினார்.
ஆன்ட்ரே ரசல் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டார். இரண்டு முறை கேட்ச் கொடுத்து, அந்த கேட்சை மும்பை வீரர்கள் மிஸ் செய்தும் கூட இவரால் நேற்று கொல்கத்தா அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.