வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காதல் திருமணம், கைக்குழந்தை என ஏமாந்த மனோரமா.. ஆச்சி வாழ்வில் நடந்த மிகப்பெரிய சோகம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பால் நம் அனைவரையும் கவர்ந்தவர் ஆச்சி மனோரமா. திரையில் நம்மை சிரிக்க வைத்த ஆச்சி மனோரமாவின் திருமண வாழ்க்கையோ மிகவும் சோகங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது.

மனோரமா சினிமாவில் நடிப்பதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து வந்த நாடக கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் எஸ்.எம்.ராமநாதன். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. ஆனால் அவருடைய காதலுக்கு மனோரமாவின் தாய் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதனால் மனோரமா தன் தாய்க்கு தெரியாமல் ராமநாதனை திருச்செந்தூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு மனோரமாவின் தாய் அவர்களிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. திருமணமான சில மாதங்களிலேயே மனோரமா தாய்மை அடைந்தார். அதன்பிறகு மனோரமாவின் தாய் அவரை ஏற்றுக் கொண்டார்.

மனோரமா வயிற்றில் குழந்தையுடன் 9 மாதங்கள் வரை கணவனின் கட்டாயத்தால் நாடகங்களில் நடித்து வந்தார். பிறகு பிரசவத்திற்கு தன் தாயுடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தார். அப்பொழுது ராமநாதன் குழந்தை பிறந்த உடன் வருவதாக கூறினார்.

தன் தாயுடன் ஊருக்கு சென்ற மனோரமாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தி தெரிவிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து தான் ராமநாதன் மனோரமாவை பார்க்க வந்துள்ளார். ஆனால் குழந்தையையும், மனோரமாவையும் பற்றி விசாரிக்காமல் உடனே நாடகத்தில் நடிக்க ஊருக்கு கிளம்புமாறு மனோரமாவை வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ந்த மனோரமா முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

அப்பொழுது கோபித்துக் கொண்டு சென்ற ராமநாதன் அதன் பிறகு மனோரமாவை சந்திக்கவில்லை. கணவர் என்றாவது ஒரு நாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் மனோரமா சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதன்பின் சில மாதங்களிலேயே கணவரிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்தது. தன் கணவர் பணத்திற்கு தான் மதிப்பு கொடுக்கிறார் காதலுக்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட மனோரமாவும் அவருக்கு விவாகரத்து அளித்தார்.

அதன்பிறகு ராமநாதன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மனோரமா தன் அண்ணனாக நினைத்த கிருஷ்ணனின் தங்கையை தான் ராமநாதன் திருமணம் செய்து கொண்டார். இந்த கிருஷ்ணன் தான் மனோரமா, ராமநாதன் இருவரின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து இட்டவர்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாத மனோரமா தொடர்ந்து சினிமாவில் நடித்து பிரபலமானார். இதுவரை ஆயிரத்து ஐநூறு படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் ராமநாதன் இறந்த பொழுது அவருக்கு குழந்தை இல்லாததால் மனோரமா தன் மகன் பூபதியுடன் சென்று அவருக்கு இறுதி சடங்கு செய்தார். இதுகுறித்து கேட்ட  தன் தாயிடம் அவர் வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம் ஆனால் என் காதல் உண்மை என்று கூறியுள்ளார். சொந்த வாழ்வில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் மனோரமா இறுதி வரை திரையில் நம்மை மகிழ்வித்துள்ளார்.

manorama
manorama

Trending News