கொரோனாவிற்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும் இன்னும் பல படங்கள் ஓடிடியில் தான் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் நடிகர் கவின் நடிப்பில் லிப்ட் படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. அந்த படம் எப்படி உள்ளது, ரசிகர்களின் கருத்து என்ன என்பதை தான் நாம் பார்க்க போகிறோம்.
தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்ற நிலையில் உடன்பிறப்பே படமும் அந்த வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோதிகாவின் 50வது படமான உடன்பிறப்பே படத்தை இயக்குனர் சரவணன் இயக்க, ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். உயிருக்கு உயிரான அண்ணன் – தங்கையாக சசிகுமார், ஜோதிகா நடித்துள்ளனர். ஜோதிகாவின் கணவராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வு கச்சிதமாக உள்ளது.
கதைப்படி ஜோதிகாவின் கணவர் நேர்மையான அடிதடிகளை விரும்பாத ஒருவர். ஜோதிகாவின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்கு காரணமாகிறது. பதினைந்து ஆண்டுகளாக பேசாமல் இருக்கும் இரண்டு குடும்பமும் இணைவது தான் உடன்பிறப்பே படத்தின் கதை. கிட்டத்தட்ட கிழக்குச்சீமலயிலே படத்தை நினைவுபடுத்துகிறது.
அண்ணன் தங்கை இடையே நடக்கும் பாசப்போராட்டம், அழுகை என பல இடங்களில் ஜோதிகா அவரது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர் தவிர மற்ற கதாபாத்திரங்களும் அவரவர் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள். படத்தில் பல இடங்களில் சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஒரு பக்கா பேமிலி எண்டர்டெயினர் படமாகவே உள்ளது.
தற்போது வரை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் உடன்பிறப்பே படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்களே கிடைத்து வருகிறது. ஆங்காங்கே பல இடங்களில் கதையில் லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அந்தளவிற்கு பெரியதாக தெரியவில்லை. எனவே உடன்பிறப்பே படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.