இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னர், ஐசிசி நடத்தும் மிகப்பெரிய போட்டியான 20 ஓவர் உலக கோப்பை தொடங்கவிருக்கிறது. அனைத்து நாட்டு வீரர்களும், ரசிகர்களும் உலகக்கோப்பையை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.
அனைத்து நாடுகளும் தங்களது அணியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்துவிட்டது. அதில் நிறைய புதுமுக வீரர்களும், அதிரடி ஆட்டக்காரர்களும் தேர்வாகியுள்ளனர். இவர் எளிதாக தேர்வாகி விடுவார், இவர் தேர்வாக மாட்டார், என்றெல்லாம் நினைத்த கற்பனைகள் எதிர்மறையாகியுள்ளன.
ரவிச்சந்திரன் அஸ்வின்: இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அசத்திவிடுவார் ஆனால் சமீபகாலமாக இவருக்கு ஒரு நாள் போட்டிகளிலும், 20 ஓவர் போட்டிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடக்கவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் தேர்வாகி விளையாட காத்துக்கொண்டிருக்கிறார்.
டைமல் மில்ஸ்: இவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர். இதுவரை யாரும் கேள்விப்படாத ஒரு ஆட்டக்காரர். இவர் கடைசியாக 2011ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இவர் உலக கோப்பை போட்டியில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
ஹமீத் ஹாசன்: ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டுக்கு பின் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடியது இல்லை. இந்நிலையில் இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தேர்வாகி விளையாட காத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
ரவி ராம்பால்: இந்திய நாட்டை வம்சாவழியாக கொண்ட ராம்பால், மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். 2011ம் ஆண்டுக்கு பின் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியதில்லை. ஆனால் கரீபியன் லீக்கில் அசத்தியதன் காரணமாக உலக கோப்பை விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
டேவிட் விசே: இவர் ஒரு காலத்தில் பெங்களூர் ஐபிஎல் அணிக்காக விளையாடியுள்ளார். 2016 ஆம் ஆண்டு சவுத்ஆப்பிரிக்கா அணிக்காக ஆரம்பத்தில் விளையாடினார். அதன்பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். நமீபியா நாட்டை பூர்வீகமாக கொண்ட டேவிட் விசே தற்போது அந்த நாட்டிற்காக விளையாடுவதற்கு உலகக்கோப்பை அணியில் தேர்வாகியுள்ளார்.
தவ்லத் ஸத்ரான்: ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட காத்திருக்கும் மற்றொரு வீரர் ஸத்ரான். கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்கான் அணிக்காக விளையாடியவர். 32 போட்டிகளில் 40 விக்கெட் எடுத்த இவர், இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட உள்ளார்.