தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வந்த கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு பின்னர் காலியாக இருந்த இடத்தை தனி ஒரு ஆளாக நிரப்பியவர் தான் வடிவேலு. கோலிவுட்டில் காமெடி கிங்காக வலம் வந்த வடிவேலு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் நடிக்காத படங்களே இல்லை என்னும் அளவிற்கு ஒரே சமயத்தில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் யார் கண்பட்டதென்று தெரியவில்லை. திடீரென வடிவேலுக்கு அடுக்கடுக்காக பிரச்சனைகள் உருவாக தொடங்கியது. வடிவேலு கதாநாயகனாக நடித்து பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான 24ஆம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு தடை விதித்தது. அதனால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தமிழ் சினிமாவின் வடிவேலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த நான்கு வருடங்களாக அவரை பெரிய திரையில் பார்க்க முடியாமல் பல ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இந்நிலையில்தான் சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வடிவேலு மீதான பிரச்சனை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டது.
இதனை அடுத்து வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வரிசையில் வடிவேலுவின் முதல் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்க உள்ளார். இப்படத்திற்கு வடிவேலுவின் பிரபல கதாபாத்திரத்தின் பெயரான நாய் சேகர் என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

நாய் சேகர் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதுதவிர லைகா தயாரிப்பில் உருவாக உள்ள மேலும் புதிய நான்கு படங்களில் வடிவேலு நடிக்க உள்ளாராம். அதன்படி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், நடிகர்கள் சிவகார்த்திகேயன், அர்ஜூன் மற்றும் லாரன்ஸ் ஆகியோரின் படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக லாரன்ஸ் உடன் சந்திரமுகி 2 படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.