சுந்தர் சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நல்ல தரமான காமெடி கமர்ஷியல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் என பெயரெடுத்துள்ளவர் இயக்குனர் பொன்ராம். இவருடைய முதல் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமே மாபெரும் வெற்றி பெற்றது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்றே சொல்லலாம். அதுவரை சாதாரண நாயகனாக வந்தவர் படம் வெளியானபிறகு வசூல் நாயகனாக மாறினார்.
மேலும் அந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது. இத்தனைக்கும் அந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் ஏழு கோடிதானாம்.
சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்லாமல் காமெடி நாயகனாக சூரிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. அதன்பிறகு உச்சத்தை தொட்டவர் தற்போது வரை முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
என்னதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருந்தாலும் அந்தப் பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது வடிவேலு தான். சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படத்தில் வடிவேலு வைத்திருந்த சங்கம்தான் அது.
அதை நினைவுபடுத்துவதற்காக வருத்தப்படாத வாலிபர் சங்கம் கிளைமாக்ஸில் வடிவேலுக்காக ஒரு மிகப் பெரிய மாஸ் சீன் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தாராம் பொன்ராம். ஆனால் அப்போது வடிவேலு வேறு சில விஷயங்களில் பிசியாகி விட்டதால் அதில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.