தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பினால் மட்டுமின்றி வித்தியாசமான உடல் மொழியாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. சில வருடங்களுக்கு முன்பு வரை அவர் இல்லாத திரைப்படங்களை கிடையாது.
பல வருடங்கள் தன்னுடைய காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்த வடிவேலு திரைத் துறையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார். தற்போது அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு வடிவேலு மீண்டும் நடிப்பதற்கு களமிறங்கியுள்ளார்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த திரைப்படம் தலைநகரம். இந்த திரைப்படத்தில் அவர் நடித்த நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. தற்போது மீண்டும் வடிவேலு மற்றும் சுராஜ் கூட்டணி நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளது.
இதில் வடிவேலு ஹீரோவாக நடிப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்திற்கான பூஜை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த பூஜையில் வடிவேலு, சுராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. அதற்கான வேலைகளில் படக்குழு தற்போது இறங்கியுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு வடிவேலு நடிக்க இருப்பதால் அவருக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
