சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கூடுதல் பொறுப்பை கொடுத்து விட்டு சென்ற நண்பன்.. பிரபல நடிகரை பற்றி பேசிய வடிவேலு

தமிழ் சினிமாவை ஒரு சமயத்தில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர் என்றால் அது வடிவேலு மட்டுமே. இவர் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அதேபோல் இவரது காமெடிக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்தது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இவரது காமெடியை விரும்பி ரசித்து வந்தனர்.

இந்நிலையில் திரை உலகில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளாக நடிகர் வடிவேலு நடிக்காமல் இருந்தார். தற்போது வடிவேலு மீதான அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வரிசையில் முதலாவதாக நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் வடிவேலுவிடம் திமுக ஆட்சி குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் கூறியதாவது, “திமுக ஆட்சி எனக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் நன்றாகவே உள்ளது. மக்கள் சந்தோஷப்படுகிறார்கள்” என கூறினார்.

இதனை தொடர்ந்து நடிகர் விவேக் மரணம் குறித்து பேசிய வடிவேலு, “அவன் ஒரு அருமையான நண்பன். அவன் இறந்தது திரையுலகிற்கும், மக்களுக்கும் பெரிய இழப்பு. அவனுடைய இறப்பை என்னால் மறக்கவே முடியாது. என்னுடைய சக நடிகன். அவன் போனது பெரிய வேதனை. அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவன் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார்” என மிகவும் உருக்கமாக பேசினார்.

vadivelu-press-meet
vadivelu-press-meet

தற்போது சிங்கம் களமிறங்கிடுச்சு என்னும் வாசகத்துடன் வடிவேலு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தனது தலைவன் வடிவேலுவை திரையில் பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். நிச்சயம் வடிவேலுவின் இந்த கம்பேக் அவருக்கு வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News